மத்திய கிழக்கில் அமெரிக்கா ஈரானுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எரிபொருள் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் நிலவுகிறது.
உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியேதான் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் ஹார்முஸ் வழியே சரக்கு கப்பல்களை மீண்டும் இயக்குவது தொடர்பாக ஓமன் மற்றும் ஈரான் இடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இத்தகவலை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி உறுதிப்படுத்தியுள்ளார்.
வளைகுடாவிற்குள் செல்ல ஓமன் எல்லையிலும், வெளியேற ஈரான் எல்லையிலும் ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமாக இரண்டு தனித்தனிப் பாதைகள் பயன்படுத்தப்படும்.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின்படி, இருவழிப் பாதைகளுக்குப் பதிலாக ஈரானிய பிராந்தியக் கடலுக்குள் அமைக்கப்பட்ட ஒரு ஒற்றைப் பாதை மட்டுமே பயன்படுத்தப்படும்.
2 முதல் 4 மாதங்கள் வரையிலான காலத்திற்கு தற்காலிகமாக பயன்படுத்தப்படும் இந்தப் பாதையின் துல்லியமான புவியியல் எல்லைகளை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன.
இப்புதிய ஒப்பந்தத்தின் கீழ், பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் வர்த்தகக் கப்பல்களைப் பரிசோதிக்கும் மற்றும் கண்காணிக்கும் அதிகாரம் ஈரானுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.
ஓமனுடன் உடன்பாடு எட்டப்பட்டாலும், ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை திரும்பப் பெறப்படாத வரை, இந்த வழியில் கப்பல்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என ஈரான் எச்சரித்துள்ளது.
ஹார்முஸை கடந்து செல்லும் சரக்குக் கப்பல்களின் மதிப்பில் 5% முதல் 7% வரை சேவை மற்றும் பாதுகாப்புக்கான கட்டணமாக வசூலிப்போம் என ஈரான் கூறுகிறது.
ஓமன் தரப்பில் 3% கட்டணம் விதிக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்கா எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படக் கூடாது எனத் தெரிவித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், "ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்பட வேண்டும்; இல்லையெனில் ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்" என எச்சரித்துள்ளார்.
அதேசமயம், தாங்கள் அமெரிக்காவுடன் நேரடியாக எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும், ஓமனுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் என்பது சுமார் 21 நாட்டிக்கல் மைல்கள் அகலம் கொண்ட மிகக் குறுகிய கடற்பகுதியாகும்.
சர்வதேசக் கடல் சட்டங்களின்படி, இதன் ஒரு பகுதி ஈரானிய எல்லைக்குள்ளும், மறுபகுதி ஓமனின் எல்லைக்குள்ளும் வருகின்றன.
எனவே, ஒரு புதிய கடல்வழிப் பாதையை உருவாக்கவோ அல்லது போக்குவரத்தைச் சீரமைக்கவோ ஈரானுக்கு ஓமனின் ஒத்துழைப்பு அத்தியாவசியம்.
அரபு நாடுகளிலேயே ஓமன் மட்டுமே எந்தப் பக்கமும் சாராத நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.
ஈரான் நேரடியாக அமெரிக்காவுடனோ அல்லது பிற மேற்கத்திய நாடுகளுடனோ பேச விரும்பாத போது, ஓமன் மூலமாகவே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.