உலகம்

பொருளாதாரத்தில் வரலாறு காணாத நெருக்கடி: $40 டிரில்லியன் தொட்ட அமெரிக்க தேசிய கடன்!

நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகையில் $32.266 டிரில்லியன் பொதுக் கடனாகவும், $7.782 டிரில்லியன் அரசாங்கங்களுக்கு இடையேயான கடனாகவும் பிரிந்துள்ளது.

அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டின் தேசிய கடன் வரலாறு காணாத வகையில் முதன்முறையாக 40 டிரில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் முதன்முதலில் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபோது இந்த கடன் தொகை $19.95 டிரில்லியனாக இருந்தது. ஆனால், தற்போது அது இரட்டிப்பாகி $40.047 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

வேகமாக அதிகரிக்கும் கடன் சுமை

கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் கடன் வளர்ச்சி விகிதம் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் $39 டிரில்லியனாக இருந்த கடன், அடுத்த 5 மாதங்களுக்குள்ளாகவே மேலும் ஒரு டிரில்லியன் டாலர் உயர்ந்து $40 டிரில்லியன் என்ற ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகையில் $32.266 டிரில்லியன் பொதுக் கடனாகவும், $7.782 டிரில்லியன் அரசாங்கங்களுக்கு இடையேயான கடனாகவும் பிரிந்துள்ளது.

கடன் உயர்விற்கான முக்கிய காரணங்கள்

அமெரிக்க அரசு செலவழிக்கும் தொகை, அதற்கு வரும் வருவாயை விட அதிகமாக இருப்பதால் ஆண்டுதோறும் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் கொரோனா கால நிவாரணங்களுக்காக பெருமளவில் கடன் வாங்கப்பட்டது. ராணுவ செலவுகள், மூத்த குடிமக்களுக்கான சோஷியல் செக்யூரிட்டி மற்றும் மெடிகேர் திட்டங்களுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வாங்கிய கடனுக்காக அரசு செலுத்தும் வட்டித் தொகையே தற்போது Medicare திட்டத்திற்கான செலவை விட அதிகரித்து, நாட்டின் இரண்டாவது பெரிய செலவினமாக மாறியுள்ளது.

இந்த $40 டிரில்லியன் கடன் சுமையானது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தோராயமாக $117,000 கடன் இருப்பதற்கு சமமாகும். தொடர் கடன்கள் காரணமாக அமெரிக்க சந்தையில் வட்டி விகிதங்களும் பணவீக்கமும் உயர்ந்து, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் வீட்டு வாடகை, கார் கடன்கள் போன்ற அன்றாட செலவுகளையும் கடுமையாக பாதித்து வருகிறது.

வருங்கால ஆபத்து

அமெரிக்க கடன்களுக்கான உச்சவரம்பு எல்லை $41.1 டிரில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் கடன் அதிகரித்தால் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த வரம்பை எட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் பொருளாதார முட்டுக்கட்டை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.