பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் மாவட்டத்தின் தர்புகாச் ஜலந்தர் பந்தா பகுதியில், நேற்று (புதன்கிழமை) காவல்துறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
சட்டவிரோத தங்கச் சுரங்கத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள சென்றுகொண்டிருந்த காவல்துறை குழு மீது ஒரு குன்றின் உச்சியில் வைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அங்கு காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.
பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என கைபர் பக்துன்கவா காவல்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரம் 10 காவல்துறை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்ந்தனர். உயிரிழந்தவர்களில் டி.எஸ்.பி ஹைதர் ஜமான் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முக்தியார் ஆகியோரும் அடங்குவர்.
காயமடைந்த 12 காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் ஐந்து காவல்துறை ரோந்து வாகனங்களுக்குத் தீ வைத்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இந்த குழுவுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு ஆதர்வளித்து வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.