பாகிஸ்தான் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 1 முதல் ஜூலை 13 வரை வளைகுடா நாடுகளில் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானோர் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சகம் வழங்கிய இந்த தரவுகள், வளைகுடா அதிகாரிகள்- பாதுகாப்பு கவலைகள், அத்துடன் குடிவரவு மற்றும் குற்றவியல் மீறல்களையும் காரணமாக காட்டியதால், நாடு கடத்தல்களின் அளவை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
பெரும்பாலான நாடுகடத்தல்கள் சவுதி அரேபியாவில் நடைபெறுகின்றன. இந்த காலகட்டத்தில் சவுதி அரேபியாவில் இருந்து 15,500 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரகம் 3,803 பேரை நாடு கடத்தியதன் மூலம் அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
மற்ற வளைகுடா நாடுகள் கணிசமாக குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன: ஓமன் 1,606 பாகிஸ்தானியர்களையும், பஹ்ரைன் 521 பேரையும், கத்தார் 429 பேரையும், குவைத் 97 பேரையும் நாடு கடத்தின. இந்த புள்ளிவிவரங்கள் ஆறு ஜி.சி.சி. நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியுள்ளன.
சட்டவிரோத நுழைவு, விசா காலம் முடிந்தும் தங்கியிருத்தல், பிச்சை எடுத்தல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் போலியான அல்லது முறையற்ற ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்களில் 4,628 பேர் தலைமறைவானவர்கள் ஆவர், அதே நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 1,294 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் 968 பேர் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டனர், அதே சமயம் 1,155 வழக்குகளில் பாஸ்போர்ட் தொலைத்த பாகிஸ்தானியர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். விசா விதிமீறல்களுக்காக மேலும் 689 பேரும், நாட்டிற்குள் நுழைய மறுக்கப்பட்ட வழக்குகளில் 342 பேரும் நாடு கடத்தப்பட்டனர்.
'மற்றவை' என்ற பரந்த பிரிவின் கீழ் 6,000-க்கும் மேற்பட்ட நாடுகடத்தல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதுகுறித்த இதர விவரங்கள் அமைச்சகத்தால் வழங்கப்படவில்லை.