உலகம்

கின்னஸ் சாதனை: 1.29 டன் எடையில் பிரம்மாண்ட பூசணிக்காய் வளர்த்து பிரிட்டிஷ் விவசாயி அசத்தல்!

பிரிட்டனின் ஹாம்ப்ஷயர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான இயன் பேட்டன் என்ற விவசாயி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இயன் பேட்டன் மற்றும் அவரது இரட்டைச் சகோதரர் ஸ்டூவர்ட் ஆகியோர் இணைந்து, கடந்த 2025-ஆம் ஆண்டில் 1,278.8 கிலோகிராம் (2,819.25 பவுண்ட்) எடைகொண்ட 'மக்கிள்' என்ற பூசணிக்காயை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்திருந்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த விவசாயி ஒருவர், சுமார் 1,295.8 கிலோகிராம் (2,856.8 பவுண்ட்) எடைகொண்ட பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு பெண் நீர்யானையின் எடைக்கு இணையான இந்த பூசணிக்காய், உலக அளவில் இதுவரை வளர்க்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே மிக அதிக எடையுடையதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

'பகீரா' எனப் பெயரிடப்பட்ட ராட்சத பூசணி

பிரிட்டனின் ஹாம்ப்ஷயர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான இயன் பேட்டன் என்ற விவசாயி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 'பகீரா' என்று பெயரிடப்பட்ட இந்த ராட்சத பூசணிக்காயை, பர்க்ஷயரில் நடைபெற்ற 'வார்கிரேவ் நர்சரி' போட்டியில் அவர் காட்சிப்படுத்தினார். அங்கு கின்னஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ நடுவர் முன்னிலையில் எடையிடப்பட்டு, புதிய உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது.

சொந்த சாதனை முறியடிப்பு

இயன் பேட்டன் மற்றும் அவரது இரட்டைச் சகோதரர் ஸ்டூவர்ட் ஆகியோர் இணைந்து, கடந்த 2025-ஆம் ஆண்டில் 1,278.8 கிலோகிராம் (2,819.25 பவுண்ட்) எடைகொண்ட 'மக்கிள்' என்ற பூசணிக்காயை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். தற்போது அந்தப் பழைய சாதனையை, இயன் பேட்டன் தனது புதிய பூசணிக்காய் மூலம் முறியடித்துள்ளார். இந்த பிரம்மாண்ட சாதனையின் பின்னணியில் இயன் பேட்டனின் தீவிர உழைப்பு நிறைந்துள்ளது.

பூசணிக்காயைப் பராமரிப்பதற்காக மட்டுமே அவர் தினமும் 6 மணி நேரத்தைச் செலவிட்டுள்ளார். இந்தப் பூசணி செடிக்கு தினமும் சுமார் 130 கேலன் (சுமார் 492 லிட்டர்) தண்ணீர் ஊற்றப்பட்டது. உச்சக்கட்ட வளர்ச்சி காலத்தில், இந்தப் பூசணிக்காய் நாளொன்றுக்கு சுமார் 40 சென்டிமீட்டர் அளவிற்குப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. இதன் சுற்றளவு 20 அடிகளுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

மாடுகளுக்கு உணவாகும் 'பகீரா'

இந்த சாதனைக் காய் அடுத்த சில வாரங்களுக்கு சவுத்தாம்ப்டன் அருகிலுள்ள 'சன்னிஃபீல்ட்ஸ்' பண்ணையில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும். அதன்பின்னர், இந்த ராட்சத பூசணிக்காய் மாடுகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT