உலகம்

393 அடி உயரத்தில் தொங்கும் மளிகை கடை

கடையில் கழிப்பறை வசதி எதுவும் இல்லாததால், வேலை நேரத்தில் அடிக்கடி கீழே இறங்கி ஏறும் சிரமத்தை தவிர்க்க அங்குள்ள ஊழியர்கள் தண்ணீர் குடிப்பதை கூட தவிர்த்து விடுகின்றனர்.

சில நிறுவனங்கள், கடைகள் அதன் வித்தியாசமான அமைப்புக்காக இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷினியுஜாய் தேசிய புவியியல் பூங்காவில் செங்குத்தான மலைப்பாறையில் தரையில் இருந்து சுமார் 393 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு விசித்திரமான மளிகைக் கடை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெறும் 2 சதுர மீட்டர் பரப்பளவில் மரப்பலகைகளால் கட்டப்பட்டுள்ள இந்த சிறிய கடை, உலகின் மிகவும் ஆபத்தான கடை என்று அழைக்கப்படுகிறது. தொழில்முறை மலையேற்ற உபகரணங்கள் மற்றும் இரும்பு கயிறுகளின் உதவியுடன் அந்த செங்குத்தான பாறையில் சுமார் 1.30 மணி நேரம் உயிரை பணயம் வைத்து ஏறி தான் கடைக்கு செல்ல வேண்டும். கடையில் கழிப்பறை வசதி எதுவும் இல்லாததால், வேலை நேரத்தில் அடிக்கடி கீழே இறங்கி ஏறும் சிரமத்தை தவிர்க்க அங்குள்ள ஊழியர்கள் தண்ணீர் குடிப்பதை கூட தவிர்த்து விடுகின்றனர்.

மலை ஏறும் சுற்றுலா பயணிகளின் தாகத்தை தீர்க்கும் இந்த ஊழியர்கள், தினமும் காலையில் கனமான பொருட்களை தங்களது முதுகில் சுமந்து கொண்டு இந்த மலைப்பாறையில் ஏறுகின்றனர். இந்த கடையில் ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 மட்டுமே. கடையில் ஊழியர்கள் இல்லாத நேரத்தில், அங்குள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலமாக பணம் செலுத்திவிட்டு பொருட்களை எடுத்து செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT