கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள போர்ட்டோ ஜெர்மெனோ பகுதியில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின.
கிரீஸ் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மோதிக்கொண்ட ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா இரண்டு விமானப் படை வீரர்கள் என மொத்தம் 4 பேர் இருந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், விமானிகளின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
விபத்தில் ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காட்டுத்தீ பரவலாக தீவிரமடைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் காட்டுத் தீயானது தன் தலைநகர் பாரிஸை விட 4 மடங்கு பெரிய பரப்பளவை எரித்து சாம்பலாக்கியுள்ளது.
சுமார் 2,24,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ராணுவம், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரத்யேக விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
வீசும் கடுமையான காற்று, வறண்ட நிலப்பரப்பு மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் ஆகியவை தீயை விரைவாகப் பரவச் செய்வதால், தணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் ஸ்பெயினின் பல்வேறு பகுதிகளில் பரவி வந்த காட்டுத் தீயின் வேகம், தீயணைப்பு வீரர்களின் தொடர் முயற்சியால் தற்போது சற்றுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்ட இந்த காட்டுத் தீ காரணமாக சுமார் 3.5 லட்சம் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
வானிலை முக்கியக் காரணமாகக் கருதப்பட்டாலும், திட்டமிட்டு நாசவேலையில் ஈடுபட தீ வைக்கப்பட்டதா அல்லது மனிதத் தவறுகளால் தீ வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில் அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.