நோபல் பரிசு பெற்றவரும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணருமான பால் க்ரூக்மேன், எலான் மஸ்க்கின் கைகளில் உள்ள ஸ்டார்லிங் நிறுவனத்தின் கட்டுப்பாடு அவரிடமிருந்து அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் உடைய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங் செயற்கைகோள் இணைய சேவையை வழங்கி வருகிறது.
ஸ்டார்லிங்க் இனி வெறும் இணையச் சேவை மட்டுமல்ல, அது போரில் ஒரு முக்கிய ராணுவத் தொழில்நுட்ப அமைப்பாக மாறிவிட்டது. எனவே ஒரு தனிநபரின் முடிவுகள் ஒரு நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடாது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பால் க்ரூக்மேன் எச்சரித்துள்ளார்.
ரஷியா-உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் சேவைகளின் முக்கியத்துவம் குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட ஒரு கட்டுரையின் பின்னணியில் க்ரூக்மேன் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
உக்ரைன் ராணுவம் ஸ்டார்லிங்க் சேவைகளை எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த மஸ்க்கின் முடிவுகள் போரை நேரடியாகப் பாதிக்கின்றன என்று பால் க்ரூக்மேன் கவலை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற முக்கிய முடிவுகள் அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்குள் இருக்க வேண்டுமே தவிர, தொழிலதிபர்களின் அதிகார வரம்பிற்குள் இருக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் ராணுவம் ஸ்டார்லிங்கை அதிகமாகச் சார்ந்திருப்பது, அந்நாட்டிற்கு ஒரு பலமாகவும் பலவீனமாகவும் மாறிவிட்டது என்று க்ரூக்மேன் தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஒரு அமைப்பின் மீது ஒரு தனி நபர் முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பது சரியல்ல என்றும், இந்த விஷயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு, அங்குள்ள தகவல் தொடர்பு அமைப்புகளில் கடுமையான இடையூறு ஏற்பட்டது.
அந்த நேரத்தில், ஸ்டார்லிங்க் நிறுவனம் அங்குள்ள மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு இணைய அணுகலை வழங்கியது.
அதன்பிறகு, உக்ரைன் ராணுவம் போர்க்களத்தில் டிரோன்களை இயக்கவும், தகவல் தொடர்புகளைப் பரிமாறிக்கொள்ளவும் ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்தத் தொடங்கியது.
இதன் மூலம், உக்ரைனின் பாதுகாப்பில் ஸ்டார்லிங்க் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
இருப்பினும், தாக்குதல்களுக்கு ஸ்டார்லிங்கை பயன்படுத்த அனுமதி இல்லை என்று மஸ்க் வாதிடுகிறார்.
உக்ரைன் ராணுவம் சேவை விதிமுறைகளை மீறி, அதைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதில் ஏற்படும் தாமதம் குறித்தும் மஸ்க் மத்திய அரசை விமர்சித்திருந்தது சர்ச்சை ஆகியது.