மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அன்று பாரம்பரிய தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், குறைந்தது 30 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும் பலர் உள்ளே சிக்கியிருப்பதாக அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் தெரிவித்தனர்.
உயிர் பிழைத்த சுரங்க தொழிலாளர்களில் ஒருவரான ஃப்ளோரியன் ககுவெண்டேவின் கூற்றுப்படி, நானா-மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் இந்த சுரங்கம் இடிந்து விழுந்தது.
உள்ளே சிக்கியிருப்பதாக நம்பப்படும் கூடுதல் சுரங்கத் தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும், ஆனால் அவர்களை உயிருடன் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் "குறைந்து கொண்டே வருகின்றன" என்று அவர் கூறினார்.
சுரங்க விபத்து குறித்து பேசிய மாகாணத்தின் துணை மேயர், சுலைமான் பி, மீட்புக் குழுவினரும் அப்பகுதி மக்களும் பல மணி நேரம் போராடி இடிந்து விழுந்த சுரங்கத்தில் இருந்து 30 உடல்களை மீட்டதாகவும், காயமடைந்த சுரங்க தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
"இது மிகவும் கொடூரமானது. தங்களால் மீள முடியாத நிலையில் உள்ளவர்களை இந்த படுகுழியிலிருந்து மீட்க உதவுமாறு, அமைப்புகளிடமும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமும் நாங்கள் உதவி கோருகிறோம்," என்று பி கூறினார்.
சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தோன்றும் காணொளிக் காட்சிகள், அங்கு நடந்த குழப்பமான மீட்பு பணிகளை பதிவு செய்துள்ளன.
பெரும்பாலும் சேறு படிந்த இளம் ஆண்களும் பெண்களுமான சுரங்க தொழிலாளர்கள், குழியில் இருந்து ஒரு சடலத்தை வெளியே இழுப்பதை காண முடிந்தது. அதே சமயம், டஜன் கணக்கான பிற சுரங்க தொழிலாளர்களும் பணியாளர்களும் அந்த பரந்த இடத்தில் சிதறிக்கிடந்தனர், அவர்களில் சிலர் உதவிக்காகக் கூச்சலிட்டனர்.
அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் உதவியும் வழங்க அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறினார்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசில், பல ஆயிரம் மக்கள் சிறு அளவிலான கனிம அகழ்வு சுரங்க தொழிலில் செய்வதால், அங்கு பாரம்பரிய சுரங்கங்கள் இடிந்து விழுவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. சுரங்க தொழிலாளர்களுக்கு பொதுவாக போதுமான பாதுகாப்பு இல்லாததாலும், இந்த விபத்துகள் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாலும் இப்பணி அபாயகரமானது.