கொலம்பியாவின் நரினோ மாகாணத்தின் தொலைதூர பகுதியில் திறந்தவெளி தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஆறு சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகராட்சியில் நடந்த இந்த விபத்தை தொடர்ந்து, மேலும் 12 முதல் 15 சுரங்க தொழிலாளர்கள் காணாமல் போனதாக தகவல் வந்துள்ளதாக, நரினோவின் பேரிடர் மீட்பு அதிகாரியான ஜார்ஜ் டோவர் காஸ்டிலோ தெரிவித்தார். விபத்துக்கான மீட்பு பணிகளை நகராட்சி அதிகாரிகள் கையாண்டு வருவதாகவும், ஆனால் தகவல் தொடர்பு கடினமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே அடர்ந்த மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது, மேலும் படகு அல்லது சிறிய விமானம் மூலம் மட்டுமே அங்கு சென்றடைய முடியும்.
"அவர்களின் அடுத்த அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர்களுக்கு கூடுதல் உதவி தேவைப்படுமா என்பதை பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம்," என்று டோவர் காஸ்டிலோ கூறினார்.
எக்ஸ் தளத்தில் ஒரு செய்தியில், நரினோவின் ஆளுநர் லூயிஸ் அல்போன்சோ எஸ்கோபார், இடிந்து விழுந்த தங்க சுரங்கம் ஒரு "முறைசாரா" சுரங்கம் என்று கூறினார்.
கொலம்பியாவில் நூற்றுக்கணக்கான சிறிய சுரங்கங்கள் அரசாங்க அனுமதிகள் இல்லாமல் செயல்படுகின்றன, மேலும் சில கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
"இந்த நேரத்தில், உயிர்களை காப்பாற்றுவதும், குடும்பங்களுக்கு துணையாக இருப்பதும், இந்த வேதனையான துயரத்திற்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதை உறுதி செய்வதும் எங்கள் முன்னுரிமையாகும்," என்று எஸ்கோபார் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்றடைவது கடினமாக இருப்பதுடன், சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே பாதுகாப்பு பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது.
கொலம்பிய அரசாங்கத்துடன் 2016-இல் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் சேர மறுத்த, கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகளின் (FARC) முன்னாள் உறுப்பினர்களால் வழிநடத்தப்படும் ஜாகோபோ அரேனாஸ் பிளாக் உட்பட, இரண்டு கிளர்ச்சி குழுக்கள் அப்பகுதியில் செயல்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு அறிக்கையில், கொலம்பியாவின் குறைதீர்ப்பாளர் அலுவலகம், அப்பகுதியில் உள்ள ஆயுத குழுக்கள் மனிதாபிமான உதவிகள் அந்த சிறிய நகரத்தை சென்றடைய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
"நமது முயற்சிகள் அனைத்தும் உயிர்களை பாதுகாப்பதிலும், இந்த அவசரநிலையை கவனிப்பதிலும் செலுத்தப்பட வேண்டும்," என்று அந்த அலுவலகம் எக்ஸ் தளத்தில் கூறியது.