உலகம்

உச்சத்தில் உலக நாடுகளின் கடன் அளவு: GDP-யில் 100%-ஐ நெருங்கும் அபாயம் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய வங்கிகள் விலை நிலைத்தன்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், உலக நாடுகள் தங்களின் நிதி மேலாண்மை திட்டங்களை முறையாகச் சீரமைக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்தப் பொதுக் கடன் அளவு, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100%-ஐ நெருங்கியுள்ளது.

இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த கடன் அளவு என்றும், இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிப்படையும் நாடுகள்

குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், தாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்துவதற்கே அதிக நிதி தேவைப்படுவதால், தங்களின் உள்கட்டமைப்பு, மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் தவிக்கின்றதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

இந்த அழுத்தங்கள் பொருளாதார வளர்ச்சியை பலவீனப்படுத்தி, அரசின் பொதுக் கடனைத் தொடர்ந்து நிர்வகிக்கவோ அல்லது திருப்பிச் செலுத்தவோ முடியாத நிலைக்குக் கொண்டு செல்லலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி

இருப்பினும் ஈரான் - அமெரிக்காப் போரால் எரிபொருள் விநியோகத் தடை மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தடையை சிறப்பாக சமாளித்து, 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி விகிதம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தோராயமாக 3 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சிக்கான காரணங்கள்

மின் உற்பத்தி மீதான செலவினங்கள் உட்பட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான முதலீடுகள், அமெரிக்கா மற்றும் செயற்கை நுண்ணறிவு மதிப்புச் சங்கிலியுடன் தொடர்புடைய பிற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளன.

இருப்பினும், ஹார்முஸ் நீரிணை பெரும்பாலும் மூடப்பட்டே இருக்கிறது, எரிசக்தி இருப்புகளை மறுவடிவமைப்பு செய்ய வேண்டியுள்ளது (நிரப்ப வேண்டியுள்ளது), மற்றும் பல நாடுகளில் பணவீக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும்

பொதுக் கடன் தாங்க முடியாத நிலையை எட்டியுள்ள நாடுகளில், கடனை மறுசீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

2025-ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார சமநிலையின்மை உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% ஆக அதிகரித்துள்ளது, இது கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகும்.

உபரிப் பொருளாதாரம் கொண்ட நாடுகள், தங்களின் உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டை அதிகரிக்க கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதே நேரத்தில் பற்றாக்குறை பொருளாதாரம் கொண்ட நாடுகள் தங்களின் பொது நிதியை ஒருங்கிணைத்து, நிதிப் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்றும் ஜார்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் ஆஷ்வில் நகரில் நேற்று முன்தினம் (செப்.1) நடைபெற்ற ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்திற்குப் பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கருத்துகளை பகிர்ந்துள்ளார்.