உலகம்

ஹார்முஸ் நீரிணையில் ஈரானுக்கு அமெரிக்கா தடை: உலகளவில் 10% உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

இந்தியாவிலும் இந்த மோதலின் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

ஈரானுக்கு எதிரான கடற்படைத் தடையை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்துவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் சுமார் 10% வரை கடுமையாக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளவில் எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய தடை:

தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப்: "ஹார்முஸ் நீரிணை எப்போதும் திறந்தே இருக்கும். ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களுக்கு மட்டுமே இந்தத் தடை பொருந்தும். மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்த வழித்தடத்தை வழக்கம் போல் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம்."

மேலும், இனிமேல் அமெரிக்கா இந்த வழித்தடத்தின் பாதுகாப்பாளராக செயல்படும் என்றும், பாதுகாப்பு வழங்குவதற்கான செலவுகளை ஈடுகட்ட இந்த வழித்தடத்தைக் கடக்கும் மற்ற நாடுகளின் சரக்குக் கப்பல்களுக்கு 20% கட்டணம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு:

அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய்: சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 9.6% உயர்ந்து பேரல் ஒன்றுக்கு 83.30 டாலராக நிலைபெற்றது.

இது கடந்த ஒரு மாதத்தில் பதிவான மிக உயர்ந்த விலையாகும். டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய்: அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் எண்ணெய் விலையும் 9.4% உயர்ந்து பேரல் ஒன்றுக்கு 78.14 டாலராக வர்த்தகமானது.

சமீபத்தில் ஹார்முஸ் நீரிணையில் சென்ற வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது. இதற்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள ஏவுகணை தளங்கள், விமானப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் தொடர்ந்து மூன்றாவது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

முன்னதாக கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை, தற்போதைய மோதல்களால் முற்றிலும் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார தாக்கம்:

எண்ணெய் விலை உயர்வு காரணமாக உலக சந்தைகளில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருவதால், அமெரிக்காவின் S&P 500 (0.8%)மற்றும் Nasdaq (1.6%) போன்ற முக்கிய பங்குச்சந்தை குறியீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மேலும், அமெரிக்காவின் 10 ஆண்டுகால அரசுப் பத்திரங்களின் வட்டி விகிதம் 4.61% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இந்த மோதலின் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பதால், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.38% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மற்றும் ஐ.நா-வின் எதிர்ப்பு:

அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான டோல் கட்டண விதிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "சர்வதேச நீர்நிலைகள் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டாயக் கட்டணம் விதிக்க எந்தவித சட்டபூர்வமான வழியும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "ஹார்முஸ் நீரிணையின் உண்மையான பாதுகாவலன் ஈரான் மட்டுமே. அமெரிக்கா விதித்துள்ள 20% கட்டணம் மிக அதிகம்; நாங்கள் நியாயமான முறையில் செயல்படுவோம்" என்று டிரம்பின் அறிவிப்பைக் கேலி செய்துள்ளார்.