உலகம்

1 பில்லியன் டாலரும், நாட்டிலேயே அழகான பெண்ணையும் தர வேண்டும் - துருக்கிக்கு உகாண்டா ராணுவ தளபதி வினோத நிபந்தனை - ஏன்?

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியைத் திருமணம் செய்துகொள்வதற்காக அவர் 100 மாடுகளை வழங்க முன்வந்தார். மேலும், அவர் மறுத்தால் ரோம் நகரைக் கைப்பற்றுவதாகவும் அச்சுறுத்தினார்.

துருக்கி ஒரு பில்லியன் டாலர்களும், அவர்களின் நாட்டில் உள்ள மிகவும் அழகான பெண்ணையும் தனக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்று உகாண்டா ராணுவத் தளபதி முஹூசி கைனருகபா விசித்திர நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

முஹூசி கைனருகபா, உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனியின் மகன் ஆவார். இவரே அந்நாட்டின் அடுத்த அதிபர் ஆவார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது ராணுவ தளபதியாக உள்ள முஹூசி கைனருகபா தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த சர்ச்சைக்குரிய நிபந்தனைகளை விவரித்துள்ளார்.

சோமாலியாவில் உகாண்டாவின் ராணுவப் பங்களிப்பிற்காக மேற்கூறிய அனுகூலங்களை அவர் கோரியுள்ளார்.

நிபந்தனை

துருக்கி நாடு சோமாலியா உடன் உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் மூலமும், அந்நாட்டின் தலைநகர் மொகாடிசு-வில் உள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையம் மூலமும் பொருளாதார பலன்களை பெறுகிறது.

அதேநேரம், கடந்த இருபது ஆண்டுகளாக சோமாலியாவில் உள்ள அல்-ஷபாப் போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக போரிட்டு பாதுகாப்புச் சுமையை மட்டும் உகாண்டா சுமந்து வருகிறது.

எனவே சோமாலியாவில் துருக்கி பொருளாதர பலன்களை பெற உகாண்டா ராணுவ உதவி செய்து வருவதால் இழப்பீடு தொகையாக துருக்கி நாடு 1 லட்சம் டாலர்களை வழங்கி, அந்த நாட்டில் மிகவும் அழகான பெண்ணையும் தனக்கு மனைவியாக அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எச்சரிக்கை

தனது நிபந்தனைகள் 30 நாட்களுக்குள் நிறைவேற்றப்படாவிட்டால், துருக்கியுடனான தூதரக உறவுகளை உகாண்டா துண்டிக்கக்கூடும் என்று கைனருகபா எச்சரித்துள்ளார்.

மேலும், துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் உகாண்டாவின் வான்வெளியில் பறப்பதற்குத் தடை விதிக்கப்படலாம் என்றும், தலைநகர் கம்பாலாவில் உள்ள துருக்கிய தூதரகம் மூடப்படலாம் என்றும் மிரட்டியுள்ளார்.

முஹூசி கைனருகபா இதுபோன்ற சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிடுவது இது முதல் முறையல்ல.

2022-ல் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியைத் திருமணம் செய்துகொள்வதற்காக அவர் 100 மாடுகளை வழங்க முன்வந்தார். மேலும், அவர் மறுத்தால் ரோம் நகரைக் கைப்பற்றுவதாகவும் அச்சுறுத்தினார்.

இந்த அறிக்கைக்கு அவரது தந்தையும் உகாண்டா அதிபருமான யோவேரி முசெவேனி மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.