உலகம்

இனப்படுகொலை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து துருக்கி அதிரடி!

காசாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கியின் கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்துக் கைப்பற்றிய விவகாரத்தில் துருக்கி நடவடிக்கை

இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேசப் பிடியாணை பிறப்பித்து துருக்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் காசாவிற்கு அனுப்பிய உதவிப் படகுகளை இடைமறித்தது மற்றும் காசாவில் இஸ்ரேல் நடத்திய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக துருக்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நீதிமன்றம் நெதன்யாகுவுக்கு எதிராக உள்நாட்டு அளவில் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சர்வதேச அளவில் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நெதன்யாகுவை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கைது செய்ய ஏதுவாக 'ரெட் நோட்டீஸ்' வழங்குமாறு துருக்கி உள்துறை அமைச்சகம் வழியாக இன்டர்போல் அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

காசாவில் நடந்த கொடூரக் குற்றங்களைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள துருக்கி அனுமதிக்காது என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முந்தைய வாரண்ட்

இதற்கு முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் காசா போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் கூறி பிரதமர் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.