2023 அக்டோபரில் பாலஸ்தீன நாட்டின் காசா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தத் தொடங்கிய தொடர் தாக்குதல் கடந்த ஆண்டு அக்டோபரில் தற்காலிக போர் நிறுத்தம் எட்டப்பட்டபோதும் ஓய்ந்தபாடில்லை.
கடந்த 2023 அக்டோபர் 7 முதல் தற்போதுவரை தொடர்ந்து வரும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 72,819 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 172,894 ஆகவும் அதிகரித்துள்ளது.
காசா மருத்துவ புள்ளிவிவரங்கள்படி, கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அங்குள்ள மருத்துவமனைகள் 16 பலியானவர்களின் உடல்களையும், 39 காயமடைந்தவர்களையும் பெற்றுள்ளன.
நேற்று (மே 28) காசாவில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கட்டிடங்கள் மற்றும் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் இரவில் நடத்திய தாக்குதலில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 11ஆம் தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு மட்டும் இதுவரை 922 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,786 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு
இதற்கிடையே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள யூதக் குடியேற்றப் பகுதியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, "நாங்கள் தற்போது ஹமாஸ் அமைப்பை நாலாபுறமிருந்தும் கடுமையாக நெருக்கி வருகிறோம். போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி நாங்கள் 50 சதவீதப் பகுதியைக் கட்டுப்படுத்திய நிலையில், தற்பொழுது 60 சதவீதப் பகுதியை எங்கள் வசம் கொண்டு வந்துள்ளோம்.
என்னுடைய தற்போதைய நேரடி உத்தரவு என்னவென்றால், இந்த எல்லையை 70 சதவீதமாக விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான்" என்று கூறினார்.
அப்போது மாநாட்டில் இருந்த மேற்கு கரை ஆக்கிரமிப்பு இஸ்ரேலியர்கள், "100 சதவீத காசாவையும் கைப்பற்றுங்கள்" என முழக்கமிட்டனர்.
அதற்குப் பதிலளித்த நெதன்யாகு, "வரிசைப்படியாக செல்வோம், முதலில் 70 சதவீதத்தை முடிப்போம்" என்று குறிப்பிட்டார்.