உலகம்

காசாவிற்கு உதவிப்பொருட்கள் எடுத்துச் சென்ற தன்னார்வலர்கள் மீது ராணுவம் கொலைவெறித் தாக்குதல் - வீடியோ பகிர்ந்து இஸ்ரேல் பெருமிதம்

பெண் ஆர்வலரின் கழுத்தைப் பிடித்து நெரித்து, பாதுகாப்புப் படையினர் அவரைத் தரையில் கொடூரமாகத் தள்ளி மிதிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

காசாவிற்குள் உதவிப்பொருட்கள் செல்லாத வகையில் எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. தடையை எதிர்த்து 'சுமூத் புளோட்டிலா' என்ற உதவிக்கப்பல் காசாவுக்கு உதவிப்பொருட்களை எடுத்து வந்த நிலையில் அந்த கப்பல் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் உச்சமாக இந்த கொடூர தாக்குதலை வீர தீர செயலாக சித்தரித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் (Minister of National Security) இதாமர் பென் க்வீர் அந்த காட்சிகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார்.

அமைச்சர் பென் க்வீர் பகிர்ந்துள்ள வீடியோவில், கைது செய்யப்பட்ட சர்வதேச மனிதநேய ஆர்வலர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டு, தலையைத் தரையில் முட்டியபடி முழங்காலிட்டு அமர வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை அமைச்சர் ஏளனமாகப் பேசிப் பரிகசிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

எதிர்த்து பேச முயன்ற ஒரு பெண் ஆர்வலரின் கழுத்தைப் பிடித்து நெரித்து, பாதுகாப்புப் படையினர் அவரைத் தரையில் கொடூரமாகத் தள்ளி மிதிக்கும் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. அவர்களில் பலர் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

வீடியோ வெளியிடப்பட்டதை தொடர்ந்து கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள இஸ்ரேலியத் தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளன.

சர்வதேச உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேலின் இத்தகைய தாக்குதல் இது முதன்முறையல்ல.

2003இல் பாலஸ்தீனியர்களின் வீடுகள் இடிக்கப்படுவதைத் தடுக்க முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த இளம் ஆர்வலர் ரேச்சல் கோரி என்பவர் மீது இஸ்ரேலிய ராணுவம் புல்டோசரை ஏற்றிக் கொன்றது.

2024இல் காசாவில் உணவுப் பொட்டலங்களை விநியோகித்து வந்த 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' அமைப்பைச் சேர்ந்த 7 வெளிநாட்டு உதவிப் பணியாளர்கள் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.