உலகம்

காசா: மினி பஸ் மீதான தாக்குதலில் 5 பேர் பலி - அமைதி முயற்சியை இஸ்ரேல் சீர்குலைக்க முயல்வதாக கத்தார் பிரதமர் குற்றச்சாட்டு

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாகவும், 1,400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கத்தார் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாலஸ்தீன நகரமான காசாவில் மினி பஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

காசா நகரின் தென்மேற்கே டெல் அல்ஹவா பகுதியில் பயணிகள் மினி பேருந்தை குறிவைத்து நேற்று (புதன்கிழமை) இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் பேருந்தின் மீது தாக்கியதில் அதன் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

இந்த வான்வழித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

கத்தார் பிரதமர் குற்றச்சாட்டு

இதனிடையே காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள் போர்க் குற்றவாளிகள் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கூறியுள்ளார் .

பிரபல பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனுக்கு அளித்த பேட்டியில், அவர் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

காசாவில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கான கத்தாரின் முயற்சிகளை ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேல் சீர்குலைக்க முயன்று வருவதாகவும் கத்தார் பிரதமர் குறிப்பிட்டார்.

2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலை ஒரு 'படுகொலை' என்று விவரித்த அவர், அது கண்டிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இருப்பினும், இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவமனைகளும் பள்ளிகளும் குறிவைக்கப்படுவதாகவும், என்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் இதை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

அக்டோபர் 2025ல் நடைமுறைக்கு வந்த, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாகவும், அன்று முதல் காசாவில் 1,400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கத்தார் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

காசாவின் சுமார் 70 சதவீதத்தை இஸ்ரேல் இப்போது கட்டுப்படுத்துவதாக தெரிவித்த அவர், 2025ல் தோஹாவில் பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களைக் குறிவைப்பதன் மூலம், நாட்டின் இறையாண்மையை இஸ்ரேல் மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

SCROLL FOR NEXT