இந்தியா முதல் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரை உலகின் பல நாடுகளில் ஜென் இசட் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பணவீக்கம், வேலையின்மை, மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஜென் இசட் தலைமுறையினர் அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) செயல்முறையில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும் எஸ்ஐஆரில் மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் கருத்தை நிராகரித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக முடிவெடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
எஸ்ஐஆர் செயல்முறையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக நீக்கப்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்த இளைஞர் மற்றும் ஜென் இசட் இயக்கமான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் கூடிய 7000 பேர் வரை கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த சிஜேபி நிறுவனர் தீப்கே மற்றும் நிர்வாகிகள், டெல்லி விமான நிலையத்தில், விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி, தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மற்றும் உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தியது. சிஜேபி கடந்த வாரம் டெல்லி சென்டர் பூங்காவில் அமைதியான முறையில் தேசியக்கொடிக்கு ஏந்தி போராட்டம் நடத்தியது. அடுத்ததாக வரும் 23 ஆம் தேதி போராட்டத்திற்கு சிஜேபி அழைப்பு விடுத்துள்ளது.
பணவீக்கம், விலைவாசி உயர்வு, பள்ளிகளின் மோசமான நிலை, நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட குறைப்புகளை எதிர்த்து பிரான்சில் போராட்டம் வெடித்துள்ளது.
கடந்த மாதம் பாரிஸில் உள்ளூரில் தொடங்கி, படிப்படியாக நாடு முழுவதும் பரவியது.
கடந்த சனிக்கிழமை முதல் அங்கு வன்முறை நிகழ்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நிலைமை இப்படியே சென்றால் அவசரநிலையும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிபர் மேக்ரான் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பிரான்சில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இந்த போராட்டங்கள் மேக்ரான் அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளன.
பிரான்சின் அண்டை நாடான பெல்ஜியத்திலும் பொதுச் செலவினக் குறைப்புகள் மற்றும் விலைவாசி உயர்வால் அதிகரித்து வரும் குடும்பச் செலவுகளுக்கு மத்தியில், உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகப் பதிவுக் கட்டண உயர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரஸ்ஸல்ஸ் மற்றும் லீஜ் நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, காவல்துறை தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியது.
போர்ச்சுகலின் தலைநகரான லிஸ்பனில், நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்த சம்பளம் மற்றும் மலிவு விலையில் வீடு கிடைப்பதில் உள்ள சிரமம் ஆகியவற்றை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.
இதற்கிடையில், இத்தாலியில் தேக்கமடைந்த ஊதியம், பணவீக்கம் மற்றும் அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதில் உள்ள சிரமம் ஆகியவற்றுக்கு எதிராக மிலன் நகரில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் மோதல்களும் பதிவாகின.
அல்பேனியாவில், பல்கலைக்கழகங்களின் மோசமான நிலைமைகள், கல்விக்கான அதிக செலவு மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைக் கண்டித்து மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
அக்டோபர் 13 அன்று, டிரானாவில் உள்ள கல்வி அமைச்சகத்திற்கு வெளியே நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
ஸ்பெயின் நாட்டிலும் பண வீக்கம், அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்பெயினில் வருகிற நவம்பர் 29ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி நாட்டில் இனவெறி, தீவிர வலதுசாரி அரசியல், ஜனநாயக உரிமை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிலி நாட்டில் கல்வித் துறையில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இதற்கிடையில், துருக்கியில், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் போதுமானதாக ஓய்வூதியம் இன்மைக்கு எதிராக ஓய்வூதியதாரர்களும் தொழிலாளர் சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணியத்துடன் வாழ்வதற்கான தங்கள் உரிமையைக் கோரி, ஓய்வூதியதாரர்கள் அங்காராவில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டு போராடினர்.
அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மெய்லியின் உயர்கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கல்வி நிதியை குறைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் வெடித்துள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது சில போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியதால் மோதல் ஏற்பட்டது.
அடுத்த மாதம் இடைக்கால தேர்தலை சந்திக்கும் அமெரிக்காவில், 'நோ கிங்ஸ்' அமைப்பு, அதிபர் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பேரணிகளை நடத்தியது.