ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் மத்திய கிழக்கு முழுமைக்கும் பரவியுள்ளது. அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதலில் உலகின் எண்ணெய், எரிசக்தி ஏற்றுமதிக்கு பிரதான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்படுத்துவதும் இதற்கு காரணம்.
அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என்று கெடுபிடி காட்டும் ஈரான், இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளுக்கு மட்டும் அவ்வழியே கப்பல்களை கொண்டு செல்ல சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதுவரை எட்டு இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. அதில் குறிப்பாக 94,000 டன் எல்பிஜி ஏற்றி வந்த 'பிடபிள்யூ டைர்' மற்றும் 'பிடபிள்யூ எல்ம்' ஆகிய கப்பல்கள் அடங்கும்.
ஹார்முசை பாதுகாப்பாக கடந்த இந்திய கப்பல்கள் ஒவ்வொன்றாக வந்துகொண்டிருக்கும் சூழலில் மத்திய கிழக்கில் இன்னும் சிக்கித் தவிக்கும் இந்திய கப்பல்களும் அவற்றில் உள்ள இந்திய மாலுமிகளையும் குறித்த கவலை இருந்து வந்தது.
இந்த சூழல் டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில், "நமது இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர், கவலை வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு எரிபொருளை ஏற்றி வரும் சுமார் 19 கப்பல்கள் தற்போது ஜலசந்தியில் முடங்கியுள்ளன. இதில் இந்திய கொடியுடன் 9 கப்பல்கள் மற்றும், 10 வெளிநாட்டு கொடி ஏந்திய கப்பல்களும் இதில் அடங்கும்.