உலகம்

பிரான்சில் பள்ளி மாணவர்கள் போராட்டம்: "இஸ்லாம் நாட்டை கைப்பற்ற நினைக்கிறது" - டொனால்ட் டிரம்ப்!

போராட்டம் குறித்து அரசாங்கமும் மாணவர் அமைப்புகளும் வெவ்வேறு தரவுகளை வெளியிடுகின்றன.

பிரான்சில் தீவிரமடைந்து வரும் பள்ளி மாணவர்களின் போராட்டத்திற்கு, அங்கு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் "மக்கள்தொகை இடப்பெயர்வு" மற்றும் இஸ்லாமிய மதமுமே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரான்ஸ் முழுவதும் 2.5 லட்சம் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வரும் நிலையில் டிரம்ப்பின் இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப்பின் 'ட்ரூத் சோஷியல்'பதிவு

நேற்று தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது, பிரான்சில் நடப்பது வேறொன்றுமில்லை, அது கட்டுப்பாடற்ற மாபெரும் மக்கள்தொகை இடப்பெயர்வு .

இது பள்ளிக்கூடங்களைப் பற்றியது அல்ல, ஒரு காலத்தில் மிகச்சிறந்த நாடாக விளங்கிய பிரான்ஸை இஸ்லாம் கைப்பற்ற நினைப்பதே இதன் பின்னணி என்று மிக வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் நீண்ட காலமாகவே ஐரோப்பாவின் சமூகப் பிரச்சினைகளுக்கு அங்குள்ள குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் இடைக்காலத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தனது ஆதரவாளர்களைத் திரட்டுவதற்காக டிரம்ப் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

போராட்டத்தின் பின்னணி என்ன?

டிரம்ப் இதனை மத மற்றும் குடியேறிகள் பிரச்சினையாக மாற்ற முயன்றாலும், பிரான்ஸ் நாட்டு மாணவர்களோ அல்லது அங்குள்ள தொழிற்சங்கங்களோ குடியேற்றம் குறித்தோ, மதம் குறித்தோ எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை.

செப்டம்பர் மாதம் முதல் பிரான்சில் தொடரும் இந்த மாபெரும் போராட்டத்திற்கு கல்வித்துறை சார்ந்த குறைபாடுகளே முக்கிய காரணங்கள் ஆகும்.

பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுவது, கூரைகள் ஒழுகுவது மற்றும் எலித்தொல்லைகள் இருப்பது. போதிய ஆசிரியர்கள் இல்லாததால் வகுப்புகள் பாதிக்கப்படுவது மற்றும் வகுப்பறைகளில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது.

கல்வித்துறைக்கு அரசு வழங்கும் நிதி மிகக் குறைவாக இருப்பது போன்ற காரணங்களை மாணவர்கள் கோரிக்கைகளாக வைக்கின்றனர்.

வன்முறையாக மாறிய போராட்டங்கள்

பிரான்சின் மார்சைய், நாந்த்ஸ் , துலூஸ் போன்ற நகரங்களில் போராட்டங்கள் அமைதியாகத் தொடங்கினாலும், ஸ்ட்ராஸ்பர்க், லியோன் மற்றும் ரென்னஸ் போன்ற சில இடங்களில் வன்முறை வெடித்தது.

போராட்டக்காரர்கள் சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதால், பிரான்ஸ் நாட்டு போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்த மோதல்களின் போது போலீசார் சிறுவர்கள் மீது கடுமையான பலப்பிரயோகம் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் பெற்றோர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இதற்கிடையில், போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு இந்த வாரம் முழுவதும் பிரான்ஸ் முழுக்க உயர்நிலைப் பள்ளிகளுக்கான வகுப்புகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

முடங்கிய கல்வி நிறுவனங்கள்: இரு வேறு தகவல்கள்

போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து அரசாங்கமும் மாணவர் அமைப்புகளும் வெவ்வேறு தரவுகளை வெளியிடுகின்றன.

மாணவர் அமைப்புகள் சார்பில் பிரான்ஸ் முழுவதும் சுமார் 2,000 உயர்நிலைப் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

கல்வி அமைச்சகம் சார்பில் சுமார் 891 பள்ளிகளில் மட்டுமே வகுப்புகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

நிலைமையைச் சமாளிக்கச் சில பிராந்தியங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கல்விச் சீர்திருத்தத்தைக் கோரித் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் தற்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அரசுக்கு மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT