அமெரிக்காவில் ‘எட் ஷீரன்’ நடத்தும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராப் பாடகரான மேக்லமோர், பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் நடைபெறவுள்ள மற்ற நிகழ்ச்சிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இசைக் கலைஞரான எட் ஷீரன் மொத்தம் 10 இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அடுத்த இசை நிகழ்ச்சி பிலடெல்பியாவில் செப்டம்பர் 19 அன்று மீண்டும் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், “பாலஸ்தீனத்தை விடுவி” என்ற கருத்தை ராப் பாடகர் மேக்லமோர் கூறியிருந்தார். அவர் தெரிவித்த இந்த கருத்து இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது.
மேலும் மேக்லமோர் அந்த இசை நிகழ்ச்சியில், “நான் இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள விரும்பியதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, இது போன்ற அரங்கங்களில் எழுந்து நின்று, என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான இரண்டு வார்த்தைகளைச் சொல்வதற்காகத்தான்.
'பாலஸ்தீனத்தை விடுவி, பாலஸ்தீனத்தை விடுவி' என்ற வார்த்தைகள் உரக்கத் தெளிவாக ஒலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான், காசாவில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை வரை உள்ள மக்கள், நாங்கள் அவர்களை மறக்கவில்லை என்பதை அறிந்துகொள்வார்கள்” என்று கூறினார்.
அவர் தெரிவித்த கருத்து இணையத்தில் வெளியாகி சர்ச்சையானதை தொடர்ந்து, அமெரிக்காவில் நடக்க இருக்கும் மற்ற நிகழ்ச்சிகளில் மேக்லமோர் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேக்லமோர் தனது இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எட் ஷீரன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அவர் அந்த பதிவில், “நியூஜெர்சியில் நடந்த எனது நிகழ்ச்சிகளில் மேக்லெமோரின் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அவர் தொடர்ந்து துணைக்கலைஞராக பங்கேற்றால், எனது வரவிருக்கும் சுற்றுப்பயணத் தேதிகளில் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிடுவோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அவர் கூறிய அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டிராமல், தனது நிகழ்ச்சியின் போது மேக்லெமோர் தனது செய்தியின் ஒரு பகுதியை வெளிப்படுத்திய விதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
மேக்லெமோர் சுற்றுப் பயணத்திலிருந்து விலகியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் முடிவு; அது என்னுடையதல்ல. சுற்றுப்பயணத்திற்கான ஒப்பந்தம் மேக்லெமோருடையது, என்னுடையது் அல்ல.
திட்டமிட்டிருந்த ரசிகர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்; அதேபோல், வேலைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் என்னைச் சார்ந்திருக்கும் சுற்றுப்பயணக் குழுவினரையும், மற்ற துணைக்கலைஞர்களையும், இசைக்கலைஞர்களையும் நான் கைவிட மாட்டேன்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.