சைமா வாசித் 
உலகம்

மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!

பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசித் ராஜினாமா செய்துள்ளார்.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வாசித் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 9 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

நிதி மோசடி மற்றும் போலி சுற்றறிக்கை குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக இவரை பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு பரிசீலிக்க இருந்த நிலையில் இந்தத் திடீர் ராஜினாமா நிகழ்ந்துள்ளது.

மோசடி பின்னணி

நவம்பர் 2023ல் அந்த பிராந்திய இயக்குநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.

சீனாவுக்கான பயணச் செலவு தொடர்பான நிதியை கையாடல் செய்ததாகவும், தனது முனைவர் பட்டம் மற்றும் சான்றிதழ்கள் குறித்துத் தவறான தகவல்களை சமர்ப்பித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்த காலத்தில் வங்கதேசத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலம் வாங்கியதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தொடர் சர்ச்சையால் 2025ல் சம்பளமில்லாத விடுப்பில் அவர் அனுப்பப்பட்டார். அவரை நிரந்தரமாக பதவிநீக்கம் செய்யவதற்காக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

அதில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார் சீனப் பயணச் செலவு தொடர்பான பிரச்சினை, தனது உதவியாளரின் நிர்வாகத் தவறால் ஏற்பட்டது என்றும் அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.

அதேபோல தனது முனைவர் பட்டம் தொடர்பாக தவறான தகவலை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், ஆட்டிசம் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளுக்காக தனக்குக் கௌரவக் முனைவர் பட்டம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அதைத் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் நில விவகாரம் குறித்து குறிப்பிடுகையில் உலக சுகாதார அமைப்பில் சேருவதற்கு முன்பே வங்கதேசச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அந்த நிலத்தை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT