உலகம்

இந்திய தொழிலதிபர் சுனில் மிட்டலுக்கு 'செவாலியே விருது' அறிவித்த பிரான்ஸ்

கடந்த ஆண்டு செவாலியே விருது தமிழகத்தை சேர்ந்த பிரபல திரைப்பட கலை இயக்குனரான தோட்டா தரணிக்கு வழங்கப்பட்டது.

பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனர் சுனில் பார்தி மிட்டலுக்கு பிரான்சின் மிக உயரிய குடிமை விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மிட்டலுக்கு, 'லீஜியன் ஆஃப் ஹானர்' என அழைக்கப்படும் பிரான்சின் மிக உயரிய குடிமை விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1802ல் நெப்போலியன் போனபார்ட்டால் நிறுவப்பட்ட 'லீஜியன் ஆஃப் ஹானர்', பிரெஞ்சு குடியரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த குடிமகன் விருதாகும்.

சுனில் மிட்டல்

சுனில் மிட்டலுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நேற்று அறிவித்தார்.

இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் மிட்டலின் நீண்டகாலப் பங்களிப்பையும், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறைகளில் அவரது சிறந்த சாதனைகளையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என்று அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1992ல் ஏர்டெல் தொடங்கப்பட்டதிலிருந்தே மிட்டல் பிரான்சின் நண்பராக இருந்து வருகிறார் என்று இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் தியரி மத்தூ கூறினார்.

பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையான ஏர்டல் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

செவாலியே பெற்ற இந்தியர்கள்

கடந்த ஆண்டு செவாலியே விருது தமிழகத்தை சேர்ந்த பிரபல திரைப்பட கலை இயக்குனரான தோட்டா தரணிக்கு வழங்கப்பட்டது.

அதன்முன் நடிகர்கள் சிவாஜி கணேஷன், கமல்ஹாசன் இந்த விருதை பெற்றுள்ளனர்.

இசைக்காக அருணா சாயிராம், பதிப்பக பணிக்காக கண்ணன் சுந்தரம், சமூக பணிக்காக அஞ்சலி கோபாலன் ஆகியோரும் இந்த விருதை பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT