மியான்மர்
உலகம்

மியான்மரில் திருமண வீட்டின் மீது வான்வழி தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு

2021 ராணுவப் புரட்சிக்குப் பிறகு உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மியான்மரில் திருமண வீட்டின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் திருமண நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டின் மீது ராணுவ விமானம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மியான்மரின் ஷான் மற்றும் கரென்னி மாநிலங்களின் எல்லைப் பகுதியில் உள்ள மோபே (Moe Bye) கிராமத்தில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இடம்பெயர்ந்த மக்களான மணமக்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென விமானம் மூலம் குண்டுவீச்சு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பயங்கர வெடிச்சத்தம்

விமானத்தின் சத்தம் கேட்டதாகவும், சிறிது நேரத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பலர் உயிரிழந்து கிடந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், உள்ளூர் மக்கள் பகிர்ந்த புகைப்படங்களில் ஆறு உடல்கள் காணப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மற்றும் குழந்தையும் அடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறுதிப்படுத்தாத தகவல்

எனினும், 17 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. மியான்மர் ராணுவமும் இதுவரை இந்தத் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

2021-ம் ஆண்டு ராணுவப் புரட்சிக்குப் பிறகு மியான்மரில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT