கபில் தேவ், இம்ரான் கான், கவாஸ்கர்  
உலகம்

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் - பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம்

அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பார்வைக் குறைபாடு குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யக் கோரி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு 21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு மனிதநேய அடிப்படையில் முறையான மருத்துவ சிகிச்சையும், பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.

இம்ரான் கான்

73 வயதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று 2023 முதல் சிறையில் உள்ளார்.

அவருக்கு சிறையில் போதிய வசதிகள் இல்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்தும் ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இம்ரான் கான் அவர் அடைக்கப்பட்டுள்ள அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத் சர்வதேச மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சில மணி நேரங்களுக்கு பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரின் உடல்நிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மோசமில்லை என அவரை பரிசோதித்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும் அவரின் குடும்பத்தினர் அவரை சந்திக்கவும், மருத்துவ சிகிச்சைக்கும் இம்ரான் கானுக்கு உரிமை மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த சூழலில் தான் இம்ரான் கானுக்கு ஆதரவாக அவர் கிரிக்கெட் கேப்டனாக இருந்த சர்வதேச கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு கூட்டதாக கடிதம் எழுதியுள்ளனர்.

கடிதம்

அந்த கடிதத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவக் குழுவில், இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர்களையும் சேர்த்து முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

குறிப்பாக, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பார்வைக் குறைபாடு குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

இம்ரான் கானைச் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு வாரந்தோறும் அனுமதி அளிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை, எந்தவித நிர்வாகத் தாமதமுமின்றி பாகிஸ்தான் அரசு பின்பற்ற வேண்டும்.

மருத்துவக் குழுப் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை எந்தவிதத் தாமதமுமின்றி உடனடியாக இம்ரான் கானுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

கையெழுத்து

இந்த கடிதத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலீப் வெங்சர்க்கார் ஆகியோரையும் சேர்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளின் உள்ளிட்டவற்றின் முன்னாள் கேப்டன்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் உள்நாட்டு சட்டப் நடைமுறைகளில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவ உதவி வழங்குவது அடிப்படை மனிதநேயம் என்றும் முன்னாள் கேப்டன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.