ஈபிள் கோபுரத்தில் BAPS அமைப்பினர் விசிட்  
உலகம்

இந்து அமைப்பினர் வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிப்பு.. போராட்டத்தால் ஈபிள் கோபுரம் மூடல்

இந்தியா - பிரான்ஸ் இடையேயான கலாச்சார உறவுகள் புதிய உயரத்தை எட்டியுள்ளன என மோடி பேசினார்.

இந்து அமைப்பினர் வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிப்பு காரணமாக வெடித்த போராட்டத்தால் பிரான்சின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் மூடபட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் லிஸ்டில் ஈபிள் கோபுரம் நிச்சயம் இருக்கும்.

ஆனால் நேற்று (திங்கள்கிழமை) ஈபிள் டவர் திடீரென மூடப்பட்டது. இதற்கு இந்து மதக் குழுவினர் ஏற்படுத்திய சர்ச்சையே மூல காரணம்.

பெண்கள் கூடாது

பிரான்ஸில் புதிய கோயில் திறப்பு விழாவிற்காக வந்த சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பைச் சேர்ந்த 100 பேர் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை ஈபிள் டவரைப் பார்வையிட்டனர்.

இந்தக் குழுவினர் செல்லும்போது, ஈபிள் டவரில் பணிபுரியும் பெண் ஊழியகர்கள் ஷிப்டில் இருந்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆண் ஊழியர்கள் மட்டுமே இருக்கும்படி செய்துள்ளது நிர்வாகம்.

இந்து மதக் குழுவினரின் வருகையின் போது, பெண் ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறி நேற்று ஊழியர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்குக் காரணமாக ஈபிள் டவர் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று மூடப்பட்டுள்ளது.

மன்னிப்பு - கண்டனம்

ஈபிள் டவரை நிர்வகிக்கும் 'SETE' நிறுவனம், "பெண்களுடனான தொடர்பை குறைக்குமாறு இந்து அமைப்பின் குழுவினர் கோரிக்கை விடுத்தது உண்மைதான், ஆனால் அந்த நிபந்தனையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது" என தன் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாரிஸ் BAPS கோயில் நிர்வாகம், "நாங்கள் யாருடைய பிரவேசத்தையும் தடுக்கவில்லை.

மற்ற பார்வையாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மட்டுமே நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டோம். பரஸ்பர மரியாதையையே நாங்கள் நம்புகிறோம்" எனக் கூறி மன்னிப்பு கோரியுள்ளது.

பாரிஸ் மேயர் இமானுவேல் கிரிகோயர் கூறுகையில், "பெண்களை ஒதுக்கி வைக்கும் இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரெஞ்சு மதிப்பீடுகளுக்கு எதிரானது" எனக் கூறி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரான்ஸ் தேசிய பேரவைத் தலைவர் யேல் பிரவுன் பிவெட்கூறுகையில், "வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கோரிக்கைகளுக்காக பெண்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என சாடியுள்ளார்.

மோடியின் வாழ்த்து

இந்தச் சம்பவத்திற்கு முந்தைய நாள் தான், பிரான்ஸின் முதலாவது பெரிய சுவாமிநாராயண் திருக்கோயில் பாரிஸில் கோலாகலமாகத் திறக்கப்பட்டது.

இந்த கோவிலை இணைய வழியே திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா - பிரான்ஸ் இடையேயான கலை, கலாச்சார மற்றும் அரசியல் உறவுகள் புதிய உயரத்தை எட்டியுள்ளன என்றும், இந்த கோயில் இரு நாடுகளின் கூட்டுறவுக்கு சான்றாக பல நூற்றாண்டுகள் விளங்கும் என்றும் வாழ்த்திப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT