உலகம்

வேலையின் போது உறங்கிய பெண் ஊழியர் - பணி நீக்கம் செய்த நிறுவனத்திடம் ரூ.964 கோடி இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் மனு

இங்கிலாந்தில் ஏ.டி.எச்.டி என்ற குறைபாட்டுடன் பிறந்த ஹானன் பர்ன்ஸ், கிட்பாட் நிறுவனத்தில் பொறியியல் துணை தலைவராக பணியாற்றி வந்தார்.

இங்கிலாந்தில் வேலை நிமித்தமாக பயணம் மேற்கொண்ட ஒரு பெண் ஊழியர், ஒரு அறையில் அசந்து தூங்கியதை அடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இழப்பீடாக 964 கோடி ரூபாய் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் அதீத செயல்பாட்டு கோளாறு (ADHD) என்ற பாதிப்புடன் ஹானன் பர்ன்ஸ் பிறந்துள்ளார். இவர் பிர்மிங்காமில் உள்ள கிட்பாட் நிறுவனத்தில் பொறியியல் துணை தலைவராக பணியாற்றி வந்தார்.

இவர் ஏப்ரல் 2023 அன்று ஆஸ்திரேலியாவின் லோஃபர் நகரில் நடைபெற்ற நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றார்.

அப்போது அவர் அந்த பயணத்தின்போது, சிறிதளவு மது அருந்தியிருந்ததால் தான் தங்கியிருந்த அறையின் சாவியை தொலைத்துவிட்டார்.

இதனால் அவரால் தனது அறைக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு, வெளியில் உள்ள ஒரு சிறிய அறையில் இரவு முழுவதும் உறங்கியுள்ளார்.

இதையடுத்து பர்ன்ஸ் வேலை பார்த்து வந்த கிட்பாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தொழில்முறை பயணத்தில் பொறுப்புணர்வு இல்லாமல் நடந்துகொண்டதாக கூறி, பெண் ஊழியரை பணியில் இருந்து நீக்கினார்.

இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் ஊழியர், தனக்கு ஏ.டி.எச்.டி என்ற குறைபாடு இருப்பதால், தான் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாகவும், தனக்கு நிறுவனத்தில் 0.85 சதவீத பங்குகள் இருப்பதால், இழப்பீடாக 964 கோடி ரூபாய் தரும்படியும் கோரினார்.

இதை எதிர்த்து கிட்பாட் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், ரூபாய் 964 கோடி இழப்பீட்டு தொகையை நிராகரித்து, ரூபாய் 12.68 கோடி இழப்பீட்டுத் தொகையாக தருவதாகவும், மேலும் ஊழியர் வைப்புத்தொகையாக 1.27 லட்சம் செலுத்தும்படியும் கூறியது.

இந்த வழக்கு நீதிபதி ரேச்சல் வெடர்ஸ்பூன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர், கிட்பாட் நிறுவனத்தை ஓபன் ஏ.ஐ நிறுவனம் ரூபாய் 3,836.76 கோடிக்கு கையகப்படுத்தினால், நான்கு ஆண்டுகளில் ஊழியரின் பங்குகளின் மதிப்பு ரூபாய் 267.13 கோடியாக உயரும் என கூறினார்.

மேலும் நீதிபதி, ஊழியர் கோரிய அசாதாரணமான தொகைக்கு சரியான நிதி நிபுணர்களின் மதிப்பீடு சான்றுகள் இல்லாமல் வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT