தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்கு ஆதரவாக, தவறான தகவல்களைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டி, நாட்டின் சுயதீன ஊடகம் ஒன்றைச் சேர்ந்த ஆறு பத்திரிகையாளர்களை எகிப்திய காவல்துறை கைது செய்துள்ளது.
ஆனால் அரசின் இந்தக் குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்துள்ளது.
எகிப்தின் ‘மட்சதாஷ்’ (Matsaddash) என்ற ஊடக நிறுவனத்தின் 6 பேர் கொண்ட ஆசிரியர் குழுவை எகிப்து அரசு கைது செய்துள்ளது. இவர்கள் தடை செய்யப்பட்ட எகிப்திய இஸ்லாமிய அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக, வெளிநாட்டு நிதிக்காக தவறான செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டி இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த முகமது அஷ்ரப் அபு எமைரா, அப்துல்லா காத்ரி, இஸ்லாம் பரகாத், உமர் ஹெலால், முகமது மஹ்மூத் மற்றும் முகமது அடெல் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எகிப்தின் மனித உரிமைகள் அமைப்பு (EIPR) ஒன்றின் அறிக்கையின்படி, காவல் சீருடையில் இல்லாத பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை (செப்.28) மாலை இவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, சில மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கைது சம்பவம் தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்த செய்தி இணையதளம் தடைசெய்யப்பட்ட ‘முஸ்லிம் பிரதர்ஹுட்’ (Muslim Brotherhood) என்ற இயக்கத்துடன் இணைந்து, வெளிநாட்டு நிதி உதவியுடன் நிர்வகிக்கப்பட்டு வருகிறது” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் எகிப்தின் உள்துறை அமைச்சகத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மட்சதாஷ், முஸ்லிம் பிரதர்ஹுட் இயக்கத்திற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தாங்கள் தன்னிச்சையாகச் செயல்படும் பத்திரிகையாளர்கள் என்றும், தவறான தகவல்களுக்கு எதிராகவே தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், அவர்கள் தங்களது வழக்கறிஞர்களையோ அல்லது குடும்பத்தினரையோ தொடர்புகொள்ள அனுமதிக்கப்படவில்லை என்றும் செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் அப்தெல்ரஹ்மான் மன்சூர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத குழு என 2013-ல் அறிவித்து, முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்பிற்கு தடைவிதித்தது எகிப்து.
இதனைத்தொடர்ந்து பல எகிப்தியப் பத்திரிகையாளர்களும், ஆர்வலர்களும் பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.
குறிப்பாக சுயதீன ஊடகங்கள் எகிப்தில் செயல்படுவது என்பது மிக கடினமாக ஒன்றாக இருக்கிறது.
எகிப்தில் ஏற்கனவே 19 ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த டிஜிட்டல் செய்திப் பிரிவும் கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.