உலகம்

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 34-ஆக உயர்வு

சுரங்க வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா புறநகர் பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தபோது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

மீத்தேன் வாயு கசிவினால் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் சுரங்கம் இடிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். உடனே மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பலி எண்ணிக்கை உயர்வு

இந்த வெடி விபத்தில் 34 தொழிளர்கள் பலியானார்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுரங்கத்திற்குள் 22 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்துக்கு முன்பு தொழிலாளர்களின் உறவினர்கள் சோகத்துடன் காத்து கிடக்கிறார்கள்.

இந்த சுரங்க வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இழப்பீடு:

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும், அதேவேளையில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் பதற்றத்துடன் தகவலுக்காகக் காத்திருப்பதாகவும் பலோச் தெரிவித்தார்.

மீட்புக் குழுவினர் மிகவும் கடினமான சூழலில் பணியாற்றி வருவதாக பலூசிஸ்தான் மாகாண சுரங்க மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் ஷோயப் நோஷர்வானி கூறினார். தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் மாகாண அரசு முழு வீச்சில் ஈடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்த நோஷர்வானி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் 5,00,000 பாகிஸ்தான் ரூபாயை இழப்பீடாக மாகாண அரசு வழங்கும் என்று அறிவித்தார்.

SCROLL FOR NEXT