அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் 8-ந்தேதி அமெரிக்கா- ஈரான் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதில் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஈரான் கூறி இருந்தது. ஆனால் சில நாட்களாக லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.
மேலும் லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்தத்தை ரத்து செய்வோம் என்றும் ஈரான் எச்சரித்து உள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சூழலில் ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளது.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், அமைதி ஒப்பந்தத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து உள்ளார். இதையடுத்து அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் தொடர்பு கொண்டு சரமாரியாக திட்டி உள்ளார்.
நெதன்யாகுவுடனான அந்த உரையாடலில் டிரம்ப் என்ன பேசினார் என்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கு நீங்கள் ஆபத்தை விளைவிக்கிறீர்கள் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். பதற்றம் அதிகரித்தால் இஸ்ரேல் மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
அதன்பின் ஆவேசமான டிரம்ப் திட்டி தொடங்கினார். நீ (நெதன்யாகு) ஒரு பைத்தியகாரன். நான் இல்லையென்றால் நீ சிறையில் இருந்திருப்பாய். நான்தான் உன்னை காப்பாற்றுகிறேன். இப்போது எல்லோரும் உன்னை வெறுக்கிறார்கள். இதன் காரணமாக எல்லோரும் இஸ்ரேலை வெறுக்கிறார்கள் என்று டிரம்ப் திட்டினார்.
ஒரு கட்டத்தில் நெதன்யாகுவிடம், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று டிரம்ப் கத்தினார். அப்போது ஹிஸ்புல்லாதான் போர் நிறுத்தத்தை மீறியதாக நெதன்யாகு தெரிவித்தார். ஆனால் லெபனானில் பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து டிரம்ப் கவலை தெரிவித்தார். ஹிஸ்புல்லா தளபதிகளை தனிப்பட்ட முறையில் குறிவைத்து கட்டிடங்களை அழிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
நெதன்யாகுவுடனான உரையாடலுக்கு பிறகு இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பதற்றம் தணியும் என டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைத் தாக்கும் திட்டங்களில் இருந்து இஸ்ரேல் பின்வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் நெதன்யாகு கூறும்போது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் பெய்ரூட்டில் உள்ள அந்த இயக்கத்தின் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும். எங்களின் இந்த நிலைப்பாடு மாறவில்லை. அதேவேளையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைதிட்டமிட்டபடி தொடர்ந்து செயல்படும் என்றார்.