அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கமான வலதுசாரி செயல்பாட்டாளர் சார்லி கிர்க் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி டிரம்ப் மற்றும் கிர்க் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அதற்கான குடியரசு கட்சி மாநாடு டல்லாஸில் நேற்று முதல் நடந்து வருகிறது. நேற்று டிரம்ப் செப்டம்பர் 10 அங்கு உரையாற்றினார். இடைக்கால தேர்தலில் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் நாட்டில் உள்ள வயது வந்த அனைத்து குடிமக்களுக்கும் ஆளுக்கு 5000 டாலர் தருவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மாநாட்டு திடலில் சார்லி கிர்க்கிற்கு குடியரசுக் கட்சியினர் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
டல்லாஸில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான குடியரசுக் கட்சியினர் "சார்லி, சார்லி" என முழக்கமிட்டனர்.
தொடர்ந்து சார்லி கிர்க்கின் நினைவாக 5 நிமிட அஞ்சலி வீடியோ திரையிடப்பட்டது.
சார்லி கிர்க் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தவர் ஆவார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 10, உட்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிகொண்டிருந்தபோது சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சார்லி கிர்க்கின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி எரிகா கிர்க்டர்னிங் பாயிண்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்று, பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
டர்னிங் பாயிண்ட் அமைப்பின் துணைத் தலைவரும் போதகருமான லூகாஸ் மைல்ஸ் குடியரசு கட்சி மாநாட்டின் மேடையில் பேசுகையில், "ஒரு வருடம் கடந்த போதிலும் அவரது குரல் ஓயவில்லை. மாறாக நமது அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் சமூக வலைதளப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார்.
சார்லி கிர்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 வயதான டைலர் ராபின்சன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான நீதிமன்ற வழக்கு நடந்து வரும் நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கல்லூரி வளாகங்களில் வலதுசாரிச் சிந்தனைகளைப் பரப்புவதில் சார்லி கிர்க் முக்கியப் பங்காற்றினார்.
இளைஞர்கள் மற்றும் தீவிரக் கிறிஸ்தவப் பழமைவாதிகள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவராகவும், டிரம்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' இயக்கத்தின் முக்கியத் தூணாகவும் அவர் திகழ்ந்தார்.
கொலை செய்யப்பட்ட அதே உட்டா பல்கலைக்கழக வளாகத்தில், நேற்று மாலை (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) டர்னிங் பாயிண்ட் அமைப்பு சார்பில் சார்லி கிர்க்கிற்கான சிறப்பு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.