உலகம்

சீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்!

மனிதக் கடத்தல் மற்றும் போலி மேட்ரிமோனி மோசடிகளில் ஈடுபட்ட 1,546 பேரைச் சீனப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

சீனாவில் நிலவும் மக்கள் தொகை சமமின்மை காரணமாக, அந்நாட்டு ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களைப் பணம் கொடுத்துத் திருமணம் செய்யும் சட்டவிரோத மேட்ரிமோனி மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த வங்கதேசத்தில் உள்ள சீனத் தூதரகம் தற்போது தனது நாட்டு குடிமக்களுக்கு அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஏன் இந்தத் திருமண மோசடிகள்?

சீனாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெண்களை விட திருமண வயதில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை சுமார் 1.75 கோடி அதிகமாக உள்ளது. இதனால் சீன ஆண்களுக்குத் தகுந்த வரன் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சில போலி மேட்ரிமோனி ஏஜென்சிகள் மற்றும் தரகர்கள், வங்கதேசம், வியட்நாம், மியான்மர், நேபாளம் போன்ற ஏழை நாடுகளில் இருந்து பெண்களைக் கடத்தி வந்து சீன ஆண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாகத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

ஏமாறும் சீன ஆண்கள்; பாதிக்கப்படும் பெண்கள்..

இந்த சர்வதேசத் திருமண மோசடிச் சந்தையில் இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இடைத்தரகர்களிடம் பல லட்ச ரூபாயைக் கொடுத்து வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்யும் சீன ஆண்கள், சில நாட்களிலேயே அந்தப் பெண்கள் பணத்துடன் மாயமாவதைக் கண்டு ஏமாந்து போகின்றனர்.

பல ஏழைப் பெண்கள் ஏமாற்றப்பட்டு, கட்டாயக் கடத்தல் மூலம் சீனாவுக்குக் கொண்டு வரப்பட்டு வற்புறுத்தித் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.

தூதரகத்தின் அதிரடி எச்சரிக்கை மற்றும் தண்டனைகள்

சீனாவில் இதுபோன்ற சர்வதேசத் திருமணத் தரகு வேலைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கதேசத்திற்கு வந்து போலி ஏஜென்சிகள் மூலம் பெண்களைப் பணம் கொடுத்துத் திருமணம் செய்ய முயலும் சீன ஆண்கள் 'மனிதக் கடத்தல்' பிரிவின் கீழ் கைது செய்யப்படுவார்கள் எனத் தூதரகம் எச்சரித்துள்ளது.

குறைந்த பட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சுமார் 4,100 அமெரிக்க டாலர் அபராதமும். அதிகபட்ச தண்டனையாக குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உடந்தையாக இருப்பவர்களுக்கும் இந்த மாதிரியான குற்றங்களுக்குத் தூண்டுதலாகவோ அல்லது உடந்தையாகவோ இருப்பவர்களுக்கும் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

சீன அரசின் நடவடிக்கை..

கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும், இதுபோன்ற மனிதக் கடத்தல் மற்றும் போலி மேட்ரிமோனி மோசடிகளில் ஈடுபட்ட 1,546 பேரைச் சீனப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

முறையான பரஸ்பர அன்பு மற்றும் சம்மதம் இல்லாமல், பணத்தைக் கொடுத்துப் பெண்களை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றும், அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் சீனத் தூதரகம் எச்சரித்துள்ளது.