இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய இணைப்பை வழங்குவது தொடர்பான போரில், தொழில்நுட்ப பில்லியனர் எலான் மஸ்க் மீண்டும் தனது சொந்த சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் பதிலடி கொடுத்துள்ளார்.
"அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களே, நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான தலைவர் என்பதை உணராததற்காக எனது பணிவான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார்.
"இயற்கையாகவே, இந்தியாவின் மகத்தான மக்கள் மீதான உங்கள் ஏகபோக சுரண்டலை தொடரவே நீங்கள் விரும்புவீர்கள்; ஆனாலும், ஸ்டார்லிங்க் போட்டியிட அனுமதிப்பதை பரிசீலிப்பீர்களா? எல்லா நாடுகளிலும் இருப்பதை போலவே இந்தியாவிலும் பல பகுதிகளில் இணைய வசதி இல்லை.
இது குழந்தைகளுக்கு கல்வி கற்கும் வாய்ப்பையும், சிறு வணிகங்கள் தங்கள் பொருட்களை உலக சந்தையில் விற்கும் வாய்ப்பையும் மறுக்கிறது. ஸ்டார்லிங்க் அவர்களின் வாழ்க்கையை நல்லவிதமாக மாற்றும்," என்று அவர் கூறினார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார்லிங்க், மத்திய அரசால் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்ட மூன்று உலகளாவிய செயற்கைக்கோள் வழி தனிநபர் தொடர்பு சேவைகளில் ஒன்றாகும். மற்றவை, பார்தி ஆதரவு பெற்ற யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் முழு உரிமையுடைய துணை நிறுவனமான ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ஆகும்.
இருப்பினும், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டு சேவைகள் தொடங்கப்படுவதற்கு, நிறுவனங்கள் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு இணங்குவதை நிரூபிக்க வேண்டும். இந்த செயல்முறையின் ஒரு பகுதியான பாதுகாப்பு மதிப்பீடு நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க் வியாழக்கிழமை மீண்டும் எக்ஸ் தளத்தில், இந்திய அரசின் "ஒவ்வொரு சட்டத்தையும்" ஸ்டார்லிங்க் நிறுவனம் கடைப்பிடித்ததாக கூறி, அதற்கு ஏன் உரிமம் வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
"ஸ்டார்லிங்க் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளதுடன், இந்திய அரசின் ஒவ்வொரு சட்டத்தையும் தேவையையும் ஐந்து ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது. அப்படி இருந்தும் ஏன் இன்னும் உரிமம் இல்லை? அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா?" என்று அவர் எழுதியிருந்தார்.
வெள்ளிக்கிழமை பதிவில், மற்ற தகவல் தொடர்பு அமைப்புகள் செயலிழந்தபோது, இயற்கை பேரிடர்களின் போது உயிர்களை காப்பாற்றுவதில் ஸ்டார்லிங்க் இன்றியமையாதது என நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த மஸ்க் கூறினார். அந்நிறுவனத்தை இந்தியாவில் செயல்பட அனுமதிப்பது, நாடு முழுவதும் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.