பிரான்ஸ் நாட்டின் உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் நினைவுச் சின்னத்தில், Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த துறவிகள் மற்றும் குழுவினர் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி தனியார் விசிட் மேற்கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்கள் கட்டாயமாக தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பிரான்சில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்து ஆன்மீகக் குழுவின் வருகையின்போது, பெண் ஊழியர்கள் தங்களின் தற்போதைய பணியிடங்களை விட்டு தற்காலிகமாக விலகி இருக்குமாறும், அவர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்களை நியமிக்குமாறும் ஈபிள் டவர் நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்த ஆன்மீகக் குழுவினர் கடந்து செல்லும் பாதைகளில் பெண்கள் நடமாடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பாலின பாகுபாடு நடவடிக்கையைக் கண்டித்து, ஈபிள் டவர் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது.
"தங்களின் பாலினத்தைக் காரணம் காட்டி பெண்களைப் பொதுவெளியில் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்க முயன்றது ஏற்றுக்கொள்ள முடியாதது" என ஊழியர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த விவகாரம் குறித்து பாரிஸ் நகர மேயர் இம்மானுவேல் கிரிகோயர் மற்றும் பிரான்ஸ் நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டதோடு, உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டனர்.
சுதந்திரமான உள்நாட்டு விசாரணை கமிட்டியின் அறிக்கையில், இந்த விசிட்டை ஒருங்கிணைத்ததில் நிர்வாகத் தரப்பில் "செயல்பாட்டு குறைபாடுகள் மற்றும் தவறுகள்" இருந்தது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, ஈபிள் டவரை நிர்வகிக்கும் SETE நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான பேட்ரிக் பிரான்கோ ருய்வோ, தனது பதவியை இந்த ஆண்டின் இறுதியில் ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2018 முதல் இந்த பதவியில் நீடித்துவந்த அவர், தற்போதைய சர்ச்சையால் பதவி விலக நேரிட்டுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து BAPS ஆன்மீக அமைப்பு தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
தங்களது துறவிகளின் தனிப்பட்ட ஆன்மீகக் கட்டுப்பாடுகள் (பெண்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளாமை) குறித்து முன்கூட்டியே ஈபிள் டவர் நிர்வாகத்திற்குத் தெளிவுபடுத்தியதாகவும், ஆனால் பெண் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கவோ அல்லது மறைந்து வாழவோ தாங்கள் ஒருபோதும் ஈபிள் டவர் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கவில்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஊழியர்களின் மன உளைச்சலுக்குத் தங்களது நெஞ்சார்ந்த மன்னிப்பையும் அவ்வமைப்பு கோரியுள்ளது.