உலகம்

எகிப்தில் ரெயில்கள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு- 112 பேர் காயம்

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியாளர்கள் விபத்துக்குள்ளான பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எகிப்து நாட்டில் இரண்டு பயணிகள் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 112 பேர் காயமடைந்தனர் என்று எகிப்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் கெய்ரோவில் இருந்து சுமார் 76 கி.மீ தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது.கிசாவில் இருந்து பயூம் நோக்கி சென்ற ரயில், கெய்ரோவில் இருந்து அஸ்வான் நோக்கி சென்ற மற்றொரு ரயிலின் பின்புறம் மோதியதாக அந்நாட்டு ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதில் பல பெட்டிகள் தடம் புரண்டன.விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியாளர்கள் விபத்துக்குள்ளான பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி உத்தரவு

விபத்து குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு எகிப்து ஜனாதிபதி அப்தெல் பத்தாஹ் அல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.

கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்பு: எகிப்தில் மிகப் பழமையான ரெயில் பாதைகள் உள்ளன. கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்தில் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT