உலகம்

எகிப்து வான்படை பயிற்சியில் ரஃபேல்-ஜே-16 போர் விமானங்கள் நேருக்கு நேர்: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவின் ஜே-10சி ரக விமானங்களை இயக்கி வரும் நிலையில், ஜே-16 விமானங்களையும் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.

எகிப்து மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெறும் 2026-ஆம் ஆண்டிற்கான "ஈகிள்ஸ் ஆஃப் சிவிலைசேஷன்" கூட்டு வான்படை பயிற்சி, சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. எகிப்திய வான்படையில் உள்ள பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களும், சீன வான்படையின் அதிநவீன ஜே-16 ரக போர் விமானங்களும் முதன்முறையாக போலி வான்வழித் தாக்குதல் பயிற்சிகளில் நேரடியாக மோதுகின்றன.

சீனாவின் ஜே-16 போர் விமானத்தின் திறன்கள்

சீனாவின் "ஹிடன் டிராகன்" என்று அழைக்கப்படும் ஜே-16 விமானங்கள், இரட்டை என்ஜின் கொண்ட 4.5-ஆம் தலைமுறை மல்டிரோல் போர் விமானங்களாகும். ஏறத்தாழ 6,000 கிலோமீட்டர் தூரம் வரை வான்வழியாகவே எரிபொருள் நிரப்பி எகிப்து வந்தடைந்துள்ள இந்த விமானங்கள், அதிநவீன ரேடார்கள், மின்னணு போர் சாதனங்கள் மற்றும் நீண்டதூர ஏவுகணைகளை ஏந்தும் திறன் கொண்டவை.

இந்திய வான்படை

இந்திய வான்படை தற்போது பிரான்சிடமிருந்து பெறப்பட்ட ரஃபேல் போர் விமானங்களை முதன்மைப் படைகளாகப் பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், எல்லைப் பகுதிகளில் சீன வான்படை தனது ஜே-16 விமான பெருக்கத்தைக் கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவின் ஜே-10சி ரக விமானங்களை இயக்கி வரும் நிலையில், ஜே-16 விமானங்களையும் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.

எகிப்தில் நடக்கும் இந்த ஒன்-ஆன்-ஒன் வான்வழி மோதல் பயிற்சிகளின் மூலம், மேற்கத்திய தொழில்நுட்பத்தில் உருவான ரஃபேல் விமானங்களின் வான் சூழ்ச்சித் திறன், ரேடார் கண்டறிதல் எல்லைகள் மற்றும் வான் தாக்குதல் உத்திகளை சீனப் படைகள் நேரடியாக மதிப்பிட முடிகிறது.

ரஃபேல் விமானங்களின் பல பலவீனங்கள் மற்றும் நுட்பங்களைச் சீனா அறிந்து கொண்டால், அது எல்லைப் பாதுகாப்பில் இந்தியாவுக்கு சவாலாக அமையக்கூடும். இதனால், இந்த பயிற்சியில் ஜே-16 மற்றும் ரஃபேல் விமானங்கள் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றன.