உலகம்

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவானதால் மக்கள் அதிர்ச்சி

அண்டை மாவட்டங்களான மனாங், டோல்பா மற்றும் மியாக்டி ஆகிய இடங்களிலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன.

நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3-ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் மையம்:

தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தின் லோமந்தாங் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கம் இரவு 9.53 மணிக்கு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அண்டை மாவட்டங்களான மனாங், டோல்பா மற்றும் மியாக்டி ஆகிய இடங்களிலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன. வட-மத்திய நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து முஸ்தாங் மாவட்டம் சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

நேபாள வெள்ள பாதிப்பு:

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதியன்று நேபாள-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனி மற்றும் பாறை சரிவு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போதேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வட மற்றும் மத்திய நேபாளம் முழுவதும் வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன; மேலும் நீர்மின் திட்டங்களும் சேதமடைந்தன.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,357 ஆக உயர்ந்தது; மேலும் 5,326-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

பொது மக்களுக்கு எச்சரிக்கை:

மற்றொரு நிகழ்வாக, கண்டகி மாகாணத்தின் பர்பத் மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக கிம்ருங் ஆற்றின் ஓட்டம் தடைபட்டுள்ளது. இதனால், ஆற்றின் கீழ் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் காளிகண்டகி ஆற்றுடன் இணையும் பகுதி வரையிலான மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட வெள்ள முன்னறிவிப்பு பிரிவு, கிம்ருங் ஆற்றின் ஓட்டம் தடைபட்டுள்ளதால் வெள்ள அபாயம் உள்ளதாக தெரிவித்தது. பர்பத் மாவட்டத்தில் உள்ள கிம்ருங் ஆறு, மோடி ஆற்றின் துணை ஆறாகும்.

நயாபுல், பிரேதாந்தி மற்றும் கீழ்நிலப் பகுதிகளில் உள்ள அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT