நேபாளத்தின் கிழக்கு பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, பூட்டான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. மக்கள் பீதியுடன் வீடுகளை விட்டு வெளியேறினர். சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
நேபாளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோஷி மாகாணத்தில், இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுவிற்கு கிழக்கே சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள தாப்லேஜுங் மாவட்டத்தின் ஓலாங்சுங் கோலா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இது ரிக்டர் அளவில் 5.6-ஆக பதிவானது. 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உண்டானது. ஷங்கு வாசாபா, இலாம் பஞ்ச்தார் உள்ளிட்ட கிழக்கு நேபாளத்தின் பல மாவட்டங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.
மேலும் காத்மாண்டு மற்றும் நாட்டின் மேற்குப் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் மேற்கு வங்காளம், சிக்கிம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது. மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங், ஜல்பைகுரி கூச் பெஹார் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
சிக்கிமின் மங்கன்பகுதிக்கு மேற்கே-வடமேற்கே 67 கி.மீ தொலைவில் இந்த 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதற்கிடையே சீனா, பூட்டான், வங்காளதேசம் ஆகிய நாடுகளின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.