உலகம்

Iran War | ஈரான் சொல்வது முற்றிலும் தவறு... டிரம்ப் ஆவேசம்

இருதரப்பில் இருந்தும் மாறுப்பட்ட தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது.

மாலை மலர்

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் தனியாளாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த போரை பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து இருதரப்பில் இருந்தும் மாறுப்பட்ட தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சொந்த ட்ரூத் சமூக வலைத்தளத்தில் ஈரானுடனான போர் குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "ஈரான் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் மிகவும் வித்தியாசமானவர்களாகவும், விசித்திரமானவர்களாகவும் உள்ளனர். அவர்கள் எங்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

இராணுவ ரீதியாக அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாலும், மீண்டும் மீண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லாததாலும், அவர்கள் அப்படித்தான் செய்திருக்க வேண்டும்.

எனினும், தாங்கள் "எங்கள் முன்மொழிவை ஆராய்ந்து மட்டுமே வருவதாக" அவர்கள் பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. காலம் கடந்துபோவதற்குள், அவர்கள் விரைவில் தீவிரமாக செயல்பட தொடங்க வேண்டும்.

ஏனெனில், ஒருமுறை அந்த நிலை வந்துவிட்டால், அதில் இருந்து "மீண்டு வருவது" சாத்தியமே இல்லை; மேலும், அதன் விளைவுகள் சற்றும் இனிமையானதாக இருக்காது," என குறிப்பிட்டுள்ளார்.