திபெத்- சீனா விவகாரம்
உலகம்

திபெத் விவகாரத்தில் வாக்குறுதியை மதிக்க வேண்டும்: அமெரிக்காவுக்கு சீனா கறார்..!

திபெத் விவகாரத்தில் அமெரிக்கா அளித்துள்ள அதன் வாக்குறுதியை மதிக்க வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி, தனி சுதந்திர நாடாக திகழ திபெத் விரும்புகிறது. அதேவேளையில், திபெத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், சீனா- திபெத் விவகாரம் எங்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினை. இதில் 3-வது நாடு தலையிடக் கூடாது என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

தைவான் மற்றும் திபெத் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பேசும்பொதெல்லாம் சீனா அதற்கு தனது எதிர்ப்பை வலிமையாக தெரிவித்து வருகிறது.

திபெத்தை ஆதரிப்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அறிக்கை

நேற்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, திபெத்தியர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் விருப்பங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. அத்துடன் தலாய் லாமாவுடனான பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு சீனாவை வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்திருந்தது.

சீனா கண்டனம்

அமெரிக்காவின் இந்த செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மயோ நிங் கூறியதாவது:-

சீனாவின் ஒரு பகுதியாக ஷிசாங்கை (Xizang) அங்கீகரிப்பதாகவும், திபெத் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை என்றும் அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளது. அந்த வாக்குறுதியை அது மதிக்க வேண்டும். ஷிசாங் தொடர்பான விவகாரங்களைப் பயன்படுத்தி சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு மயோ நிங் தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த 6-ந்தேதி 91 வயதை எட்டிய திபெத்திய ஆன்மீகத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா விடுத்த அழைப்புக்கு அவர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

தலாய் லாமா

தலாய் லாமா 1935-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி தக்ட்செர் என்ற சிறிய கிராமல் திபெத்திய குடும்பத்தில பிறந்தார். திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய்லாமா, இந்தியாவில் உள்ள தரம்சாலாவில் வாழ்ந்து வருகிறார். இவர் திபெத்தில் இருந்து 1959-ம் ஆண்டு வெளியேறினார். 1989-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.