வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அப்பகுதியை பெருமளவில் பாதித்துள்ளது. இந்த இயற்கைப் பேரிடருக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இச்சம்பவம் நடந்து 11 நாட்கள் கடந்துவிட்ட சூழலில், இருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டப் பகுதியில்அமைந்திருந்த சுரங்கப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது சீன நாட்டின் ஊழியரான லுஹைடாவ் என்பவர் உள்ளேயே சிக்கிக்கொண்டார். கடந்த 11 நாட்களாக உணவு மற்றும் வெளித்தொடர்பு ஏதுமின்றி அந்த இருள் சூழ்ந்த பகுதியில் தவித்துக் கொண்டிருந்த அவரை, மீட்புக்குழுவினர் மீட்டெடுத்தனர். உயிருடன் மீட்கப்பட்ட அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேபோன்று மற்றொரு மீட்புச் சம்பவத்தில், நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இடிந்து விழுந்த தனது வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே 60 வயதான சந்திகா ஸ்ரேஷ்டா என்ற மூதாட்டி அகப்பட்டுக்கொண்டார். மீட்புப் படையினர் அப்பகுதியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இடிபாடுகளுக்குள் அவர் உயிருடன் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவரைப் பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர்.
இந்த இரண்டு பேரதிசய மீட்புச் சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை அளித்துள்ளன. இருப்பினும், வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து நாட்டின் பல்வேறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் தீவிரமான மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.