கடல்வழி வர்த்தகப் பாதைகளில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் தடைகளுக்கு மாற்றாக, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியே இந்தியப் பெருங்கடலையும் இந்தியாவையும் இணைக்கும் புதிய ரெயில் பாதையை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ரஷியா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
ரஷிய துணை பிரதமர் மராத் குஸ்னுலின் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கடல்வழி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சூழலை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலை அடையும் புதிய தரைவழி பாதைகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாஸ்பரஸ் ஜலசந்தி மற்றும் உலகின் மிக முக்கியமான எரிபொருள் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்கள், கடல்சார் போக்குவரத்து அச்சுறுத்தல்கள் காரணமாக தரைவழி மாற்றுப் பாதைகளின் தேவையை விரைவுபடுத்தியுள்ளன. துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வழியாக இந்த ரெயில் இணைப்பைச் சாத்தியமாக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்கு நேரடி அணுகலை வழங்கும் எந்தவொரு பாதையையும் ரஷிய அரசு ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் இலக்கை எட்ட இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. அதற்கு பாதுகாப்பான, தடையில்லாத சரக்கு போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமாகும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சுமுகமற்ற உறவுகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல்கள் இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதில் முக்கிய முட்டுக்கட்டைகளாகக் கருதப்படுகின்றன. முன்னாள் சோவியத் நாடுகள் மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கு இடையே உள்ள தண்டவாள அகலப் பிரமாணங்களின் வேறுபாடு சரக்கு பரிமாற்றத்தின் போது கூடுதல் நேரத்தை எடுக்கக்கூடும். சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து மண்டலத்தை விரிவுபடுத்தி, கடல்சார் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் நோக்கிலேயே இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.