உலகம்

ஹார்முஸ் அருகே ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த கெஷம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்

போர் நிறுத்தத்திற்கான நேர்மறையான அறிகுறிகள் இருப்பதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளது.

ஈரானின் கெஷம் தீவு மீது அமரிக்கா ரகசியமாக தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்கும் முயற்சியை தடுப்பதாக கூறி தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா, ஈரானின் பதிலடியால் திணறி வருகிறது.

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கியத்துடன் எண்ணெய், ஏரியாவு ஏற்றுமதிக்கு முக்கிய கடல்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியையும் முடக்கி உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இது இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.

பேச்சு

ஈரான் அணுசக்தி திறனை முழுமையாக அழித்துவிட்டதாகவும், ஒன்றிரண்டு அணுசக்தி மையங்களே உள்ளன, அவற்றையும் நினைத்தால் 10 நிமிடத்தில் அழித்துவிட முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் பேசியிருந்தார்.

இதனிடையே போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளிலும் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. கத்தார் தலமைநகர் தோஹாவில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போர் நிறுத்தத்திற்கான நேர்மறையான அறிகுறிகள் இருப்பதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளது.

தாக்குதல்

இந்த சூழலில் தான் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த கெஷம் தீவை அமெரிக்கா தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த தீவு ஈரானின் எண்ணெய் பொருளாதார மற்றும் ராணுவ கட்டமைப்புகளை கொண்டுள்ளது.

இங்கு ஈரானின் ஏவுகணை இருப்பு உள்பட ராணுவ கட்டமைப்புகள் அதிகம் உள்ளன. இந்த ஆண்டின் மத்தியில் போர் உச்சத்தில் இருந்தபோது இத்தீவு மீது தாக்குதல்களை மேற்கொண்ட அமெரிக்கா, அங்குள்ள ராணுவ கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக ஈரான் மீது அமெரிக்கா பெரிய அளவிலான தாக்குதல் எதையும் மேற்கொள்ளவில்லை. மிரட்டல் மட்டுமே விடுத்தது வந்தார் டிரம்ப். இந்த சூழலில் கெஷம் தீவு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் செய்தி வந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள தீவில் பல வெடிப்பு சத்தங்கள் பதிவாகியதாக ஈரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏவும் உருத்திப்படுத்தியுள்ளது. ஈரான் குறிப்பிடும் தாக்குதலுக்கு உள்ளான அத்தீவு கெஷம் தீவாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.

ஈரான் மீது விரைவில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தக்கூடும் என டிரம்ப் அண்மையில் எச்சரித்த நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இன்று அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் இந்த தாக்குதல் செய்தி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT