கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பை மேலும் விரிவுபடுத்தும் ஒப்பந்தத்திற்கு டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து டென்மார்க்கின் ஆளுகையின் கீழ் வருகிறது.
கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் இயற்கை வளங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கிரீன்லாந்து அரசிடம் உள்ளது.
வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு ஆகியவை தொடர்ந்து டென்மார்க் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கடந்த சில காலமாக கிரீன்லாந்தை கையகப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி வந்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் கீழ் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி கிரீன்லாந்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பை கணிசமான அளவில் அதிகரிக்க முடிவெடிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் இதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப், டென்மார்க் பிரதமர் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் முன்னிலையில் போடப்பட்டது.
பதற்றத்தை தணிக்கும் விதமாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த நவம்பர் 3ஆம் தேதி கிரீன்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து டென்மார்க் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
179 இடங்களைக் கொண்ட டென்மார்க் நாடாளுமன்றத்தில், இன்று அவைக்கு வந்திருந்த 109 உறுப்பினர்களும் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
1951ஆம் ஆண்டு போடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஏற்கனவே அமெரிக்க ராணுவ தளங்கள் கிரீன்லாந்தில் உள்ளது. இதை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய ஒப்பந்தம் அமைந்துள்ளது.
இதன் மூலம் வடமேற்கு கிரீன்லாந்தில் உள்ள Pituffik விண்வெளித் தளத்தை நவீனப்படுத்தவும், தெற்கில் உள்ள Narsarsuaq மற்றும் கிழக்கில் உள்ள Mestersvig ஆகிய இடங்களில் புதிய பாதுகாப்புப் பகுதிகளை அமைக்கவும் அமெரிக்காவிற்கு அனுமதி கிடைத்துள்ளது.
கிரீன்லாந்து வருங்காலத்தில் டென்மார்க்கிடம் இருந்து முழு சுதந்திரம் பெற்றாலும் இந்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கிரீன்லாந்தின் இறையாண்மை பேரம் பேச முடியாதது என்பதில் டென்மார்க் தெளிவாக உள்ளது.
இந்த புதிய ஒப்பந்தம், கிரீன்லாந்தின் அரசியல் நிலையை மாற்றாமல், அதனுள் அமெரிக்க ராணுவத்தின் அணுகலை மட்டுமே விரிவுபடுத்துகிறது.
வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆர்க்டிக் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவு மூலோபாய முக்கியத்துவத்துவம் வாய்ந்தது.
இந்ங்கு அமைந்துள்ள அமெரிக்காவின் Pituffik விண்வெளித் தளம் ஏவுகணை தாக்குதல் மற்றும் விண்வெளிக் கண்காணிப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வட அமெரிக்காவை நோக்கிய ஏவுகணை அச்சுறுத்தல்களை கண்காணிக்கவும், ஆர்க்டிக் பிராந்தியம் முழுவதும் உள்ள ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் இந்தத் தளம் அமெரிக்காவிற்கு உதவுகிறது.
ரஷியா ஆர்க்டிக் பகுதியில் தனது ராணுவ உள்கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது, அதே நேரத்தில் சீனா அப்பகுதியில் தனது பொருளாதார மற்றும் மூலோபாய இருப்பை விரிவுபடுத்த முயற்சிக்கிறது.
மேலும், ஆர்க்டிக் பனி உருகுவது புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளையும் இயற்கை வளங்களுக்கான அணுகலையும் திறந்துவிடுகிறது.
அமெரிக்கா, தனது போட்டியாளர்களின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதற்கான ஒரு முக்கிய மையமாக கிரீன்லாந்தைக் கருதுகிறது.
கிரீன்லாந்தின் கனிம வளம், அமெரிக்காவின் ஆர்வத்திற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். இந்தத் தீவில் அரிய புவித் தனிமங்கள் மற்றும் பிற அத்தியாவசிய கனிமங்களின் பெரும் படிவுகள் உள்ளன .
இவை போர் விமானங்கள், ஏவுகணை அமைப்புகள், மின்னணுவியல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படுகின்றன.