உலகம்

ஸ்பெயினுக்குள் அத்துமீறி நுழைந்த அகதிகள்: கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்வு

இதில் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து ஏராளமானோர், அண்டை நாடான ஸ்பெயினில் உள்ள வட ஆப்பிரிக்க பகுதியான சியூட்டா நகருக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்கிறார்கள்.

நாடு கடத்த முடியாது

இதற்கிடையே கடல் வழியாக வரும் அகதிகளை உடனடியாக நாடு கடத்த முடியாது என்று ஸ்பெயின் நாட்டு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து மொராக்கோவில் இருந்து ஆயிரகணக்கானோர் கடல் வழியாகவும், தரை வழியாகவும் சியூட்டா நகருக்குள் நுழைய முயன்றனர். ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பேர் ஸ்பெயினுக்குள் செல்ல முயற்சித்தனர்.

எல்லையில் உள்ள தடுப்பு வேலியை கடக்க முயன்ற அகதிகளை ஸ்பெயின் ராணுவம் தடுத்தது. இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. மேலும், சீயடாவுக்குள் மக்கள் நுழைவதை தடுக்க மொராக்கோ பாதுகாப்புப் படைகள் தடியடி நடத்தியது. கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது.

இதில், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ பகுதிகளில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும், கடலில் மூழ்கியும் 34 பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஸ்பெயினுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்து உள்ளது. இதில் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

60 ஆயிரம் பேர்

இதற்கிடையே நேற்று முன்தினம் காலை முதல் தரை மற்றும் கடல் வழியாக சுமார் 60 ஆயிரம் பேர் சீயடாவிற்குள் நுழைந்ததாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

அவர்களில் சுமார் 48 ஆயிரம் பேர் மொராக்கோ விற்குத் திரும்பி சென்றுவிட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்து உள்ளது. மீதமுள்ளவர்களை கண்டு பிடித்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது.

அகதிகளை சட்ட விரோதமாக ஸ்பெயினுக்குள் அனுப்பும் கும்பல்களின் வதந்திகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயினுக்கு நுழைய முயற்சித்து உள்ளனர் என்று ஸ்பெயின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.