உலகம்

பயணியின் சூட்கேசில் இருந்த முதலை தலை : இத்தாலியில் அதிர்ச்சி

உரிமம் இன்றி முதலை தலை கடத்தியதால் ரூ.2.20 கோடி அபராதம், ஓராண்டு சிறை தண்டனைக்கு வாய்ப்பு.

இத்தாலியின் துரின் நகரில் உள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேசில் இருந்து அழியும் ஆபத்திலுள்ள அபூர்வ வகை முதலையின் தலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டவிரோத கடத்தல் தொடர்பாக முதலையின் தலையை வைத்திருந்த இத்தாலிய நபர் மீது அந்நாட்டு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

அமெரிக்காவின் மியாமியிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலியின் துரின் விமான நிலையத்திற்கு அந்த நபர் வந்து இறங்கினார்.

சர்வதேச அளவில் அழியும் நிலையிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் சட்டவிரோத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த, இத்தாலியின் நிதி போலீஸ் படையினரும் சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்நபரின் சாமான்களை சோதனை செய்தபோது முதலையின் தலை கண்டுபிடிக்கப்பட்டது.

தப்பித்த தந்திரம்

அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த முதலையின் தலை முழுமையாக உலர்த்தப்பட்டு, சாதாரண பேக்கிங் பேப்பரால் சுற்றப்பட்டிருந்தது.

இதனால் அவர் அமெரிக்காவின் பாதுகாப்பு சோதனைகளில் சிக்காமல் எளிதாக ஏமாற்றி எடுத்து வந்துள்ளார்.

கடுமையான தண்டனை மற்றும் அபராதம்

முறையான சான்றிதழ்கள் அல்லது உரிமம் ஏதுமின்றி, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குப் பகுதியைச் சேர்ந்த முதலையைக் கடத்தியதாக அந்தப் பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் ரூ. 2.20 கோடி (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்படலாம். அல்லது 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பின்னணி

அழியும் நிலையிலுள்ள விலங்குகளை சட்டவிரோத வர்த்தகத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 1973-ல் கையெழுத்திடப்பட்ட 'வாஷிங்டன் உடன்படிக்கையின்' கீழ் முதலைகள் பாதுகாக்கப்படும் விலங்கினப் பட்டியலில் உள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நினைவுப் பரிசு கடைகளில் இதுபோன்ற காய்ந்த முதலை தலைகள் பொதுவாக விற்கப்பட்டாலும், அவற்றை சர்வதேச எல்லைகளுக்குக் கடத்துவது சட்டப்படி குற்றமாகும். பல சுற்றுலாப் பயணிகள் இது தெரியாமல் வாங்கி வந்து சிக்கலில் மாட்டிக் கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT