உலகம்

பாகிஸ்தான் பகுதியாக ஜம்மு காஷ்மீர்: சர்ச்சையில் சிக்கிய நேபாள ஏர்லைன்ஸ் மேப்

பிழையான வரைபடத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியது நேபாள ஏர்லைன்ஸ்.

நேபாள அரசுக்குச் சொந்தமானது நேபாளம் ஏர்லைன்ஸ். நேற்று அந்த நிறுவனம் தங்களது விமான நிறுவன சேவை கிடைக்கும் நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது.

அதில் டெல்லி, மும்பை, பெங்களூரு, துபாய், தோஹா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தங்களது விமான நிறுவன சேவை கிடைப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தது. இந்தப் பதிவுதான் சர்ச்சையில் சிக்கியது.

அதில், இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி பாகிஸ்தானின் பிரதேசத்தில் காட்டப்பட்டு இருந்தது. அது சமூக வலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சம்பந்தப்பட்ட நேபாள ஏர்லைன்ஸ் மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியதுடன், அந்த விமான நிறுவனத்தின் இந்தச் செயலை கடுமையாக கண்டித்தனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பதிவை நீக்கிய நேபாள ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பிழையாக வெளியான அந்த வரைபடத்திற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.