அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த கான்னர் மர்பி, 2016-ஆம் ஆண்டு யூடியூபில் தனது அசுர வளர்ச்சியைத் தொடங்கினார். 'Fake Shirt Trick' மற்றும் வியக்கத்தக்க உடலமைப்பு மாற்ற வீடியோக்கள் மூலம் உலகளவில் பிரபலமானார்.
இவரது யூடியூப் சேனல் 2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. 2016 NPC டல்லாஸ் யூரோபா கேம்ஸ் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
2020-2021க்குப் பிறகு, கான்னர் மர்பியின் வீடியோக்களில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. பாரம்பரிய உடற்பயிற்சி வீடியோக்களைத் தவிர்த்து விட்டு, ஆன்மீகம், தீவிர உண்ணாநோன்பு , மனநல விழிப்புணர்வு மற்றும் விசித்திரமான ஆன்மீகச் சோதனைகள் சார்ந்த வீடியோக்களைப் பதிவிடத் தொடங்கினார்.
இதனால் அவர் கடுமையான மனநலப் பாதிப்பு நிலையில் இருக்கக்கூடும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே கவலை தெரிவித்து வந்தனர்.
தாய்லாந்தின் முன்னணி செய்தி நிறுவனமான 'தாய்ரத்' வெளியிட்டுள்ள தகவலின்படி, பாங்காக் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் 32 வயது மதிக்கத்தக்க 'கான்னர் மைக்கேல் மர்பி' என்ற அமெரிக்க குடிமகன் ஒரு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று, கான்னர் மர்பி அங்கிருந்த சாலையில் சத்தமாக கத்திக்கொண்டும், விசித்திரமான ஆன்மீக சைகைகளைச் செய்துகொண்டும், சாலையில் உருண்டு பிரண்டு அசாதாரணமான முறையில் நடந்துகொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புப் பணியாளர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தனர். போலீசாரைக் கண்டதும் அவர் அங்கிருந்த 10 மீட்டர் ஆழமுள்ள ஏரி அல்லது குளத்திற்குள் ஓடி குதித்து நீந்தத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து நீந்தியதால் சோர்வடைந்த அவர், திடீரென தண்ணீருக்குள் மூழ்கி மறைந்துள்ளார். 30 நிமிட தேடுதலுக்குப் பிறகு மீட்புக் குழுவினர் அவரது உடலை மீட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாக அவருடன் பழகி வந்த 22 வயது காதலி காவல்துறையினரிடம் கூறுகையில், மர்பிக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் எதுவும் இல்லை என்றும், அன்றைய தினம் அவர் ஏன் அவ்வாறு நடந்துகொண்டார் என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாடிபில்டர் டோனி ஹியூஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், கான்னர் மர்பி தனது வீட்டுப் பின்புறக் குளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், இறப்பதற்கு முன்பு வரை தனக்கு ஏதோ சூப்பர் மேன் போன்ற அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக மர்பி நம்பியதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பும் கான்னர் மர்பி வியூஸுக்காக பல விசித்திரமான 'Viral Stunts' மற்றும் போலி நாடகங்களைச் சமூக வலைதளங்களில் செய்துள்ளார்.
மேலும், இந்த வதந்திகள் பரவுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இதனால், இதுவும் அவரது கவன ஈர்ப்பு உத்திகளில் ஒன்றாக இருக்கலாம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் இன்னமும் நம்புகின்றனர்.
தாய்லாந்து ஊடகங்கள் மற்றும் சக பாடிபில்டர்கள் இந்த மரணச் செய்தியை உறுதிப்படுத்தியிருந்தாலும், அமெரிக்காவில் உள்ள கான்னர் மர்பியின் குடும்பத்தினரோ, அவரது அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளோ அல்லது மேலாளர்களோ இதுவரை இது குறித்து எந்தவொரு பொது அறிக்கையையும் வெளியிடவில்லை. குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.