ஆப்பிரிக்காவில் வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டாக்டர் கொலீன் பெக் 2026-ம் ஆண்டுக்கான பிரின்ஸ் வில்லியம் விருதைப் பெற்றுள்ளார். இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
பிரிட்டனின் Tusk என்ற வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு ஆண்டுதோறும் வழங்கும் Tusk Conservation Awards விழா லண்டனில் நடைபெற்றது. இதில் இளவரசர் வில்லியம், கொலீன் பெக்கிற்கு இந்த விருதை வழங்கினார்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த இவர் 2002-ம் ஆண்டு தேன் உண்ணும் கரடிகள் (Honey Badgers) குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக மொசாம்பிக்கின் நியாசா பகுதிக்குச் சென்றார். பின்னர் அப்பகுதியில் உள்ள சிங்கங்கள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள் மற்றும் ஆப்பிரிக்க காட்டு நாய்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்.
இதற்காக தனது கணவர் கீத் பெக்குடன் இணைந்து 2003-ம் ஆண்டு Niassa Carnivore Project என்ற அமைப்பைத் தொடங்கினார். சுமார் 42,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நியாசா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
வனவிலங்குகளைப் பாதுகாப்பதுடன், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், வேட்டையாடுதலைத் தடுத்தல் மற்றும் மனிதர்கள்- விலங்குகள் இடையிலான மோதல்களை குறைத்தல் போன்ற பணிகளிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் Women for the Environment Africa அமைப்பையும் 2017-ம் ஆண்டு இணைந்து நிறுவினார்.
2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை இதுவரை ஆண்களே பெற்றுவந்த நிலையில், முதல் பெண்ணாக கொலீன் பெக் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.