உலகம்

தண்ணீர் பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் - சாட் நாட்டில் 42 பேர் பலி

அண்டை நாடான சூடானில் நடந்து வரும் போரினால் லட்சக்கணக்கான அகதிகள் சாட் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இங்கு கிணற்றுத் தண்ணீரைப் பயன்படுத்துவது தொடர்பாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே தொடங்கிய மோதல் கிராமம் முழுவதும் மிகப்பெரிய வன்முறையாக மாறி 42 உயிர்களை புரிந்துள்ளது.

சாட் நாட்டின் கிழக்கு மாகாணமான Wadi Fira பகுதியில் உள்ள Igote என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கிராமம் சூடான் நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ளது.

கிணற்று தண்ணீரை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பழிவாங்கும் தாக்குதல்களில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வன்முறை அந்தப் பகுதி முழுவதும் பரவியதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வரவழைக்கப்பட்டது.

ராணுவத்தின் விரைவான நடவடிக்கையால் தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளதாக அந்த நாட்டின் துணைப் பிரதமர் லிமானே மகாமத் தெரிவித்துள்ளார்.

சாட் நாட்டில் விவசாயிகளுக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே தண்ணீர் மற்றும் மேய்ச்சல் நிலம் தொடர்பாக இத்தகைய மோதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

குறிப்பாக, அண்டை நாடான சூடானில் நடந்து வரும் போரினால் லட்சக்கணக்கான அகதிகள் சாட் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் அங்குள்ள உணவு மற்றும் தண்ணீர் போன்ற வளங்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

SCROLL FOR NEXT